

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
பால்வளத் துறை சார்பில்தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட கூட்டுறவு பால்உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் செயல்பாடுகள் குறித்தஆய்வுக் கூட்டம் அமைச்சர்கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
கரோனா காரணமாக தனியார் துறையினர் பால் கொள்முதலை குறைத்த நிலையில், விவசாயிகள் நலன் கருதி அவர்கள் உற்பத்தி செய்த முழு பாலையும் ஆவின் கூடுதலாக கொள்முதல் செய்தது.அத்துடன், தொற்றுநோய் அச்சத்தையும் மீறி சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் பால் மற்றும் பால்உப பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்கச் செய்தது. இதற்கு காரணமான அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமப்புறங்களில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு அரசு அறிவித்த நியாயமான விலையை வழங்கியுள்ளோம். அத்துடன் குறைந்த விலையில் கால்நடைத் தீவனம், மத்திய அரசின் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம்மற்றும் கால்நடை மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தின் சேவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க ஆவின் பணியாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பால் நிறுவனங்களைவிட ஆவின் நிறுவனத்தில் சிறந்த கட்டமைப்பு உள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி, ஆவின் நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சியடைய அனைவரும் பாடுபட வேண்டும்.மலேசியா, சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட நாடுகளில்ஆவின் பாலை விரும்பி வாங்குகின்றனர். எனவே பால் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில், பால்வளத் துறை செயலர் கே.கோபால், ஆணையர் இரா. நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.