

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக, ரூ.1.05 கோடி மோசடி செய்ததாக, தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல சின்னத்திரை நடிகைசித்ரா (29). சென்னை திருவான்மியூரை சேர்ந்த இவர் கடந்த மாதம் 9-ம் தேதி அதிகாலை சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை (32) நசரத்பேட்டை போலீஸார் கடந்த மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், பிரபல மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி, சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவரிடம் ஹேம்நாத் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.1.05 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டதாக ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற் றப்பட்டது. அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, புகார்தாரரான ஆஷா மனோகரனிடம் விசாரித்தனர்.
பிறகு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேம் நாத்தை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர். அப் போது, எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக அவர் ரூ.1.05 கோடி பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல, மேலும் 2 பேரிடம் அவர் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் கைது செய்தனர்.