ஆயுதபூஜை: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆயுதபூஜை: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
Updated on
1 min read

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களால் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்கள், தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

"செய்யும் தொழிலே தெய்வம்" எனப் போற்றி, தொழில் வளம் பெருகிட மக்கள் அன்னையின் அருள் வேண்டி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி சந்தனம், குங்குமமிட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளன்று தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in