மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அரசின் விருதுகளைப்பெற வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. சிறந்த மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு 5 விருதுகள், சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு 3 விருதுகள், மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்த சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் ஆகியவற்றுக்கு தலா 1 விருது, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக பணியாற்றிய சிறந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தலா 2 விருதுகள் என மொத்தம் 15 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழை கொண்டது. இதற்கான விண்ணப்பங்களை www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமும் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 12-ம் தேதிக்குள் மாநில ஆணையர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஜவஹர்லால் நேரு உள்வட்டச் சாலை, கே.கே.நகர், சென்னை – 600078 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in