

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,020 கனஅடி தண்ணீர் நேற்று காலையில் வந்து கொண்டிருந்தது.
மாவட்டத்தில் அணைப்பகுதி களிலும் பிறஇடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழை நிலவரம் (மி.மீட்டரில்): பாபநாசம்- 32, சேர்வலாறு- 21, மணிமுத்தாறு- 34, அம்பாசமுத்திரம்- 21, சேரன்மகாதேவி- 12, பாளையங் கோட்டை- 12, திருநெல்வேலி- 7.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,551 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் 2,781 கனஅடி திறந்துவிடப்பட்டது.
118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 114.35 அடியாக இருந்தது. 2,020 கனஅடி தண்ணீர் வந்தது. 455 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் வாய்ப்புள்ளது.
பிற அணைகளில் நீர்மட்டம் விவரம்:
சேர்வலாறு 141.60 அடி, வடக்கு பச்சையாறு 29 அடி, நம்பியாறு 10.62 அடி, கொடுமுடியாறு 26 அடி.
மாவட்டத்திலுள்ள அணைகளில் உள்ள மொத்த நீர் இருப்பு சதவீதம்:
பாபநாசம்- 99.43, சேர்வலாறு- 78.76, மணிமுத்தாறு- 93.42, வடக்கு பச்சையாறு- 31.10, நம்பியாறு- 13.05, கொடுமுடியாறு- 28.97.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்ச மாக கடனாநதி அணையில் 25 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 5 மி.மீ., சிவகிரியில் 3 , கருப்பாநதி அணையில் 1.50, குண்டாறு அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. அணைகளில் நீர் மட்டம் விவரம்: கடனாநதி அணை 83 அடி, ராமநதி அணை 79.50 அடி, கருப்பாநதி அணை 62.67 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 74.25 அடி. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. வெள்ளப்பெருக்கு நீடித்ததால் பிரதான அருவியில் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை நீடித்தது. மற்ற அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.