காரைக்குடியில் ரூ.67 கோடியில் தார்ச்சாலை அமைத்ததில் முறைகேடு: கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.67 கோடியில் தார்ச்சாலைகள் அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி., தமிழக முதல்வருக்குப் புகார் அனுப்பியுள்ளார்.
காரைக்குடி நகராட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.112.53 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணி தொடங்கப்பட்டது. இப்பணி 526 தெருக்களில் கழிவுநீர் குழாய்கள் பதித்து, மேன்ஹோல்கள் கட்டுவது, தேவகோட்டை ரஸ்தா பகுதியில் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பது, வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பது என மூன்று கட்டங்களாக நடந்து வருகிறது.
இப்பணி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே முடிந்திருக்க வேண்டும். இதில் 60 சதவீதப் பணிகள் கூட இதுவரை முடியவில்லை. இந்நிலையில் குழாய்கள் பதிக்கப்பட்ட 39 பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.67 கோடியில் புதிதாக தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டன.
அச்சாலைகள் தரமற்று இருப்பதால் சேதமடைந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. கண்டனூர் சாலை, சிவன்கோயில் சாலை, முத்துராமலிங்கம் நகர் செல்வவிநாயகர் தெரு உள்ளிட்ட சாலைகள் படுமோசமாகச் சேதமடைந்துள்ளன. இதையடுத்து தார்ச்சாலை அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக முதல்வருக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார் அனுப்பியுள்ளார்.
அவர் அதில் கூறுகையில், ''குழாய்கள் பதித்த பிறகு மூடப்பட்ட பாதாளச் சாக்கடை பள்ளங்களில் கான்கிரீட் அமைக்க மட்டும் ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளனர். மேலும், பணி முடிந்த பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு, ரூ.67 கோடிக்கு தார்ச்சாலை அமைத்துள்ளனர். கான்கிரீட் தளம், சாலை தரமற்று அமைக்கப்பட்டதால், அவை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.
மேலும், சாலை அமைத்ததில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. உரிய விசாரணை நடத்தி தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர், அதைக் கண்காணிக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்'' என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
