

சிறிய மாநிலமான புதுச்சேரியில் தேவைக்கு அதிகமாக ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளதாகப் புகார் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, 5 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகியோரை மத்திய உள்துறை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி பிராந்தியம் 290 சதுர கிலோ மீட்டரும், காரைக்கால் பிராந்தியம் 161 சதுர கிலோ மீட்டரும், மாஹே பிராந்தியம் 20 சதுர கிலோ மீட்டரும் உடையது. ஆனால், இங்கு தற்போது 26 ஐஏஎஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம், வாகனம், பயணப்படி ஆகிய வகையில் அரசு நிதி வெகுவாகச் செலவிடப்பட்டு வருவதாக அமைச்சரவையினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. பல அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஊதியம் தரப்படாமல் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிக அளவில் நியமிக்கப்பட்டு பல கோடி செலவிடப்படுகிறது.
சிறிய யூனியன் பிரதேசத்துக்கு அதிக அளவாக 26 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள நிலையை மாற்றித் தேவைக்கு அதிகமானோரைத் திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு ராஜீவ்காந்தி நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி தரப்பில் புகார் அனுப்பப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் பொருட்கள் வாங்க செலவு செய்த விவரமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டு இவர் மூலம் அண்மையில் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியையும் மத்திய உள்துறை இன்று (ஜன.05) மாற்றியுள்ளது.
அதன்படி, புதுச்சேரி வளர்ச்சி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அன்பரசு, லட்சத்தீவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், அரசு செயலாளர்கள் சவுமியா, ஜெயந்த்குமார் ரே, பங்கஜ் குமார் ஜா, கலால்துறை துணை ஆணையர் சஷ்வத் சவுரப் ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சீனியர் எஸ்.பி. அகன்ஷா யாதவும் ஆந்திரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.