

சென்னையில் நேற்று நள்ளிரவு முதலே பல்வேறு இடங்களில் பரவலாகப் பெய்த மழை இன்று நண்பகல் வரை நீடித்தது. ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 செ.மீ. மழை சென்னையில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஜன.12-ம் தேதி வரை தொடரும் என, ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று (ஜன. 04) நள்ளிரவு சென்னையில் தொடங்கிய மழை, இன்று (ஜன. 05) நண்பகலைக் கடந்தும் நீடித்தது.
கிண்டி, கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்வதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 செ.மீ. மழை சென்னையில் பதிவாகியுள்ளது.