

கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம் என, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. மேலும், ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவி ஏராளமான கோழிகள் இறந்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் கோழிப் பண்ணைகளைக் கண்காணிக்குமாறு கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு கால்நடைத்துறைச் செயலாளர் ஞானசேகரன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், தமிழக எல்லையோர மாவட்டங்களில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வரும் கோழி, முட்டை மற்றும் அதுசார்ந்த உணவுபொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளில் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக, இன்று (ஜன. 05) சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "கேரளா, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சல் கால்நடைகளைப் பாதித்தாலும் மனிதர்களுக்கும் வரலாம்.
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய கேரள எல்லையோர மாவட்டங்களில் 26 செக்போஸ்ட்டுகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.