

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் உருமாறிய கரோனா பாதிப்பு தமிழகத்தில் 4 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜன.05) தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"தமிழகத்தில் கரோனா தடுப்பூசியைக் குறிப்பிட்ட தட்பவெப்பத்தில் பாதுகாப்பதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய 2,880 மையங்கள் உள்ளன. விமானத்திலிருந்து கொண்டு வரப்படும் தடுப்பூசி மாநில, மாவட்டங்களுக்கு வந்தபின்பு, கடைக்கோடிக்கு அனுப்புவதற்கான மையங்கள் இவையாகும். அதன் கொள்திறன், ஜெனரேட்டர் வசதி உள்ளிட்டவற்றைப் பார்வையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தடுப்பூசி போடுவதற்கான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மத்திய அரசிடம் தடுப்பூசி போடுவதற்கான ஊசிகள், சிரிஞ்ச் (Syringe) கேட்டிருக்கிறோம். மத்திய அரசு விநியோகம் செய்யும். அதற்கு முன்பே நாங்களும் தயார் நிலையில் 17 லட்சம் வைத்துள்ளோம்.
இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2,146 பேர் வந்திருக்கின்றனர். அவர்களில் 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 3,321 பேரைப் பரிசோதித்திருக்கிறோம். அதில், 20 பேருக்குத் தொற்று உள்ளது. இவர்களுக்கு சாதாரண கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
மரபியல் ரீதியாக ஆய்வு செய்ய புனே, பெங்களூரு ஆகியவற்றுக்கு அவர்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 12 பேரின் முடிவுகள் வந்துள்ளன. இதில் 3 பேருக்கு உருமாறிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்த ஒருவருடன் மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால், உருமாறிய கரோனா பாதிப்பு தமிழகத்தில் 4 ஆக உயர்ந்துள்ளது. அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கிங் இன்ஸ்டிட்யூட்டில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உணவகங்களில் கரோனா தொற்று பரவுவதாக மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. உணவகங்களில் பரிசோதிக்கப்பட்டதில் 2.7 சதவீதத்துக்கும் கீழ்தான் தொற்று விகிதம் உள்ளது. கடந்த 4-5 நாட்களில் 8,449 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், 4,211 முடிவுகள் வந்துள்ளன. 15-ம் தேதியிலிருந்து 166 பேருக்குத்தான் குறிப்பிட்ட உணவகத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று 5-6 பேருக்குத்தான் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற பீதி வேண்டாம். குறிப்பிட்ட தொழில்துறையை வைத்து பதற்றமடைய வேண்டாம்.
தமிழகத்தில் 900க்கும் கீழ்தான் தினமும் கரோனா தொற்று பதிவாகிறது. சென்னையில் 250க்கும் குறைவாக உள்ளது. தொடர்ந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. 'வாக்-இன்' (Walk-in) பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மழைக்காலம் என்பதால் டெங்கு விழிப்புணர்வும் இருக்க வேண்டும். ஆங்காங்கே ஓரிருவருக்குத்தான் டெங்கு காய்ச்சல் உள்ளது".
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.