Last Updated : 05 Jan, 2021 01:48 PM

 

Published : 05 Jan 2021 01:48 PM
Last Updated : 05 Jan 2021 01:48 PM

பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படம்: உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதோடு அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணம் உள்ளவையாக உள்ளன.

உடன்குடி, வேம்பார் பகுதி பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பில் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால், பலர் இதனைத் தவறாகப் பயன்படுத்தி சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றைக் கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கவும் அதற்கு அனுமதி வழங்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் சர்க்கரைப் பாகு, சர்க்கரை ஆகியவற்றில் கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் வழக்கறிஞர், சீனி, பனங்கூழ் ஆகியவற்றைக் கலந்து கருப்பட்டி தயாரிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இது கலப்படத்திற்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவது உறுதியாகிறது. இதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x