Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

மாநகராட்சி, நகராட்சிகள் முன்பு 7-ம் தேதி போராட்டம்: ஜன.9-ல் பாமக அவசர நிர்வாகக் குழு கூட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த பாமகவின் அவசர நிர்வாக குழு கூட்டம் வரும் 9-ம் தேதி நடக்கிறது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக கோரி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கடந்த மாதம் 4 கட்டங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்போம் என்பது இந்த பிரச்சினையை கிடப்பில் போடும் செயலாகும். வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். கடந்த 31-ம் தேதி நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘‘பொங்கல் பரிசாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டத்தை நானே தலைமை தாங்கி நடத்துவேன். அந்த போராட்டத்தை தமிழகம் தாங்காது’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாமக நிர்வாக குழுவின் அவசரக் கூட்டம் வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் நடக்கிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி முன்னிலையில் நடக்கும் கூட்டத்துக்கு தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி ஆகியோர் பங்கேற்கின்றனர். இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தகட்டமாக ராமதாஸ் தலைமையில் போராட்டத்தை நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தொண்டர்களுக்கு ராமதாஸ் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி நாம் நடத்திவரும் போராட்டம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 கட்டங்களாக 7 நாட்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளிலும், 121 நகராட்சிகளிலும் ஆணையர் அலுவலகங்கள் முன்பு வரும் 7-ம் தேதி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க உள்ளோம். இதன்மூலம் பொங்கலுக்கு முன்பாகவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x