

திமுக ஆட்சிக்கு வந்த பின் மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த தனித்துறை அமைக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூரில் திமுக சார்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: திமுக சார்பில் நடத்தப்படும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தின் மூலம், மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள, வேளாண் சட்டங்களை எதிர்த்து, பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் வேளாண் சட்டத்தை ஆதரித்து பிரச்சாரமே செய்து வருகின்றார்.
விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்தது திமுக அரசுதான் என்பதை யாரும் மறந்துவிடவில்லை. கஜா புயலின்போது, அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் கொடுக்கவில்லை. இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த தனித்துறை அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் முறையாக வழங்கப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் பினாமிகளை கொண்டு மணல் குவாரிகள் அமைத்து மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளைக்காக, தனியாக பாலம் கட்டியுள்ளனர். (ஆணைக்குப்பம் குவளைக்கால் பகுதியில் கட்டப்பட்ட பாலத்தின் புகைப்படத்தை ஸ்டாலின் காட்டினார்). இந்த பாலத்தால் மக்களுக்கு பயன் இல்லை. இப்படி பாலம்கட்டி வரிப்பணத்தை வீணடிக்கின்றனர் என்றார்.
திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.