Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

அசாத்திய துணிச்சலுடன் செயல்பட்டவர் பி.எச்.பாண்டியன்: மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் புகழஞ்சலி; துணை முதல்வர் பங்கேற்பு

“பிரச்சினைகளை துணிச்சலாக எதிர்த்து நிற்க வேண்டும்” என்று, குட்டிக் கதையைச் சொல்லி, முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியனுக்கு, அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில், 20 சென்ட் பரப்பளவில் அவரது குடும்பத்தினரால், மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோவிந்தபேரியில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். சிலையை, முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் மரியாதை சேஷனால் உயர்ந்ததுபோல், சட்டப்பேரவை தலைவரின் வானளவிய அதிகாரத்தை பி.எச்.பாண்டியனால் மக்கள் தெரிந்து கொண்டனர். கட்சி, ஆட்சி மற்றும் சமூகப் பணியில் உத்வேகத்துடன் செயல்பட்டவர் அவர். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தில் வாதிட்டு அனுமதி பெற்றுத்தந்தார். ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை மனோ கல்லூரிக்காக வழங்கினார். திருநெல்வேலி மண்ணுக்கான வீரமும், அன்பும் அவரிடம் இருந்தன. அசாத்திய துணிச்சலுடன் அவர் செயல்பட்டார். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ``சட்டப்பேரவை தலைவராக பி.எச்.பாண்டியன் பொறுப்பு வகித்தபோது, சரித்திரம் பேசும் நிகழ்வுகளை நிகழ்த்தினார். அவருக்கு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்து அழகு பார்த்தனர்” என்றார்.

விழாவுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமை வகித்தார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள்,அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில் முதல்வரும், துணை முதல்வரும் அரசியல் பேசாமல், பி.எச்.பாண்டியனுக்கு புகழாரம் சூட்டினர். அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் வரவேற்றார். டாக்டர் பி.எச்.நவீன் பாண்டியன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x