

மறைமலை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மறைமலைநகர் காவல் நிலையம் அருகே கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து பால் நிறத்தில் வேதிப்பொருள் கலந்த கழிவுநீர் ஆறாக நுரைத்துக் கொண்டு சாலையில் ஓடுகிறது.
சாலைகளில் ஓடும் இந்தக் கழிவுநீரால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறைமலைநகர் நகராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த கழிவுநீரால் மறைமலை நகர் ஏரியில் கலந்து ஏற்கெனவே தேங்கியுள்ள மழைநீரில் மாசு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த ஏரி நீரை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்நிறுவனத்தில் குலான் ஆயில் இறக்கும்போது கசிவுஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் சீரமைக்க உத்தரவிட்டப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.