

நேர்மை தான் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் உத்தி. அதை மக்கள் போற்றி மதித்தால் தமிழகம் சீரமைக்கப்படும் என சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலம் 4 ரோடு, அம்மாப் பேட்டை, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்பை உங்களுக்கு அளித்திருக்கிறது. இளைஞர்கள், பெண்கள் நினைத்தால் மாற்றத்தை இன்னும் 3 மாதங்களில் ஏற்படுத்த முடியும். முகம், பெயர் தெரியாமல் நாளைய தலைவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
தமிழகத்தில் 60 வயதை தாண்டியவர்கள் 85 லட்சம் பேர் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக இந்தியன் தாத்தாக்கள் கோபத்துடன் இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் தளர்ந்தவர்களாககளாக இருந்தால், இளைஞர்கள் அவர்களை கையைப் பிடித்து தாங்கி வாக்குச் சாவடிக்கு கொண்டு சேருங்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.
இந்த தேர்தலில் நேர்மைதான் எங்கள் உத்தி. அதை நீங்கள் மதிக்க வேண்டும். அதை நீங்கள் போற்றினால், தமிழகம் சீரமைக்கப்படும். நான் சேலத்தில் ஒரு மாதம் தங்கி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்போதுபோல, இப்போது இல்லை. எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் சிலர், கமல்ஹாசனிடம், எட்டு வழிச் சாலை திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.சேலம் கிச்சிப்பாளையத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.