

சட்டவிரோதமாக செயல்பட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணிடம் திமுகவினர் அநாகரிகமாக நடந்துள்ளனர். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசியபோது, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். அரசு சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள் மற்றும் பொங்கல் விழாக்களை தடுக்கும் வகையிலும், தனது கட்சிக்காரர்களை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசியிருக்கிறார்.
தமிழக இறையாண்மை மற்றும் முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசக் கூடாது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.
கிராமசபை என்ற பெயரை தனியார் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் அப்பெயரை பயன்படுத்தி, தனது கட்சிக்காரர்களைக் கொண்டு கூட்டம் நடத்துகிறார். தொடர்ந்து சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.