

கேரளாவில் இந்த ஆண்டு அன்னாசி பழம் விளைச்சல் அமோகமாக இருப்பதால், தூத்துக்குடியில் அன்னாசி பழம் ஒன்று ரூ. 5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே அன்னாசி பழங்களை மலை போல குவித்து வைத்து வியாபாரி ஒருவர் விற்பனை செய்கிறார். மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
பழங்களின் அளவுக்கு ஏற்ப ரூ. 5, ரூ. 10, ரூ. 15 என மூன்று விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, தூத்துக் குடியைச் சேர்ந்த ஈஸ்வர தாஸ் என்ற வியாபாரி கூறிய தாவது:
பல ஆண்டுகளாக அன்னாசி பழங்களை விற்பனை செய்து வருகிறேன். கேரளா மாநிலத்தில் பத்தனந்திட்டா, எர்ணாகுளம் பகுதிகளில் இருந்து தோட்டங்களிலேயே அன்னாசி பழங்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். கேரள மாநிலம் மூவாற்றுப்புழா பகுதியில் இருந்து 10 டன் அன்னாசி பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறேன். இந்த ஆண்டு கேரளாவில் அன்னாசி பழங்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது, என்றார் அவர்.