

தமிழகத்தில் திறக்கப்படும் மினி கிளினிக்குகளுக்கு தற்காலிகமாக மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்வது ஏன்? என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை வளர்நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் திறப்பது தொடர்பாக கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரியும் செவிலியருக்கு ரூ.14 ஆயிரம், மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6,000 ஊதியம் வழங்கப்படுகிறது. 2000 மினி கிளினிக்களில் 585 மருத்துவ உதவியாளர்கள், 1415 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இப்பணியாளர்கள் தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவர் என சுகாதாரத்துறை இயக்குனர் கடந்தாண்டு டிச. 15-ல் அறிவிக்கை வெளியிட்டார். தனியார் ஏஜென்சி ஆட்களை தேர்வு செய்யும்போது வேலைவாய்ப்பு பதிவு, இடஒதுக்கீடு, முன் அனுபவம் பின்பற்றப்படாது.
கரோனா காலத்தில் அனுபவம் இல்லாத செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்வது ஆபத்தை ஏற்படுத்தும்.
எனவே மினி கிளினிக்குகளுக்கு தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்வது தொடர்பாக டிச. 15-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தேசிய சுகாதார ஆணையத்தின் வழிகாட்டல், நெறிமுறைகளை பின்பற்றியே தற்காலிக மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மினி கிளினிக்களால் 2.4 கோடி பொது மக்கள் பயன் அடைவார்கள். கரோனா தொற்று பரவல் காரணமாக அவசரமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுவரை 630 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் முதல் மினி கிளினிக் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்றார்.
அப்போது நீதிபதிகள், தற்காலிக அடிப்படையில் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் தேர்வு செய்யப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வழக்கறிஞர் நாளை விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.