Last Updated : 04 Jan, 2021 08:19 PM

 

Published : 04 Jan 2021 08:19 PM
Last Updated : 04 Jan 2021 08:19 PM

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய‍க் கூடாது: ஜி.கே.வாசன் பேட்டி

திருச்சி

கோவிஷீல்டு, கோவேக்சின் கரோனா தடுப்பு ஊசி விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய‍க் கூடாது என்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் திருச்சியில் இன்று ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியது:

’’அதிமுக கூட்டணியில் சின்னம் பிரச்சினை இல்லை. திமுக கூட்டணியில்தான் உள்ளது. தமாகாவின் அனைத்து மண்டலக் கூட்டங்கள் நிறைவடைந்த பிறகு, பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து அதன்பிறகே கூட்டணித் தலைமையிடம் தமிழ் மாநிலக் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் மற்றும் எந்தெந்தத் தொகுதிகளைக் கேட்பது என்று முடிவு செய்யப்படும்.

நடிகர் ரஜினிகாந்த் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதேவேளையில், சட்டப்பேரவைத் தேர்தலில் நல்லவர்களுக்கு அவர் ஆதரவு அளிப்பார் என்று நினைக்கிறேன். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தபோதே அதை ஏற்றுக் களப்பணி ஆற்ற தமாகா உறுதி பூண்டது.

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கூட்டணிகள் இறுதியான பிறகே கூட்டணிக் கூட்டங்கள் நடைபெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று மு.க.அழகிரி தனது கணிப்பைக் கூறியுள்ளார். இதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும். தமாகா தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும். திமுக கூட்டணி தோல்வி அடையும். சசிகலா வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

கோவிஷீல்டு, கோவேக்சின் கரோனா தடுப்பு ஊசி விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது. மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது. எனவே, சுகாதாரப் பிரச்சினையில் மக்களை எதிர்க்கட்சிகள் அச்சுறுத்த வேண்டாம். இதேபோல், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் வலையில் விவசாயிகள் விழாமல், தங்கள் எதிர்கால வளமான வாழ்க்கையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தொடர் மழையால் சேதம் அடைந்துள்ள நெற்பயிர் குறித்துக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல் வயலில் மழைநீர் தேங்கி கடலை, உளுந்து உள்ளிட்ட மானாவாரிப் பயிர்கள் முளைப்புத் திறனை இழந்துள்ளன. இவற்றுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

உரிய விலை கிடைக்காததால் எலுமிச்சைப் பழங்கள் பறிக்கப்படாமல் மரத்திலேயே அழுகி வருகின்றன. விவசாயிகளுக்கு உதவும் வகையில் அம்மா உணவகங்களில் எலுமிச்சை சாதம் வழங்குவதற்கு எலுமிச்சம் பழங்களை அரசு கொள்முதல் செய்வதுடன், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்’’.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x