சீனப் பட்டாசுகளை கண்டுபிடித்து அழிக்க தனிப்படை அமைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சீனப் பட்டாசுகளை கண்டுபிடித்து அழிக்க தனிப்படை அமைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை பெரு நகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயலாளர் எம்.ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

தீபாவளியையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பட்டாசுகள் வாங்கிச் செல்ல வசதியாக தீவுத்திடலில் கடைகள் அமைக்கப்படுவது வழக் கம். அவ்வாறு கடைகள் அமைப் பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கியபோது, அவர்கள் தரமான சிவகாசி பட்டாசுகளை மட்டும் வாங்கி விற்றனர். அடுத்த ஆண்டுகளில், வெளியாட்களுக்கு டெண்டர்விட்டதால் பட்டாசு விற் பனையில் அனுபவம் இல்லாதவர் களும் தீவுத் திடலில் பட்டாசு கடை அமைத்து பட்டாசுகள் விற்றனர். அப்போது மிகவும் ஆபத்தான சீனப் பட்டாசுகள் விற்கப்பட்டன.

மேலும், தீவுத் திடலில் கடைகள் அமைக்க 2013-ம் ஆண்டு ரூ.50 லட்சத்துக்கும், 2014-ம் ஆண்டு ரூ.68 லட்சத்துக்கும் டெண்டர் விடப்பட்டது. அப்போது டெண்டர் எடுத்தவர்களுக்கும், அவர்களிடம் கடையை வாடகைக்கு எடுத்த பட் டாசு வியாபாரம் செய்தவர்களுக் கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அதனால், இந்தாண்டு தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டருக்கு 4 தடவை விளம்பரம் செய்தும், யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. அதனால், டெண்டர் தொகையை ரூ.68 லட்சத்தில் இருந்து, ரூ.54 லட்சமாக குறைத்தனர். அதன் பிறகும் டெண்டர் எடுக்க யாரும் முன்வராததால், இப்போது கடை வாரியாக டெண்டர் விடப்படும் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். தீவுத்திடலில் கடைசிப் பகுதி, உள்பகுதி, முன்பகுதி என்று ஒவ்வொரு கடைக்கும் முறையே ரூ.70 ஆயிரம், ரூ.75 ஆயிரம், ரூ.90 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டர் விட்டு, அதன்மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதில்தான் தீவிரமாக இருக்கிறதே தவிர, மிகவும் ஆபத்தான சீனப் பட்டாசுகள் அங்கு விற்கும் அபாயம் இருப்பதை உணராமல் இருக்கிறது. எனவே, எங்கள் சங்க உறுப்பினர்கள் சலுகை விலையில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதிக்கும்படியும், அதன்மூலம் சீனப் பட்டாசுகளுக்குப் பதிலாக சிவகாசி பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யும்படியும் உத்தர விட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இந்த மனுவை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

சீனப் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் டிஜிபி, சென்னைப் பெருநகர காவல் ஆணையர், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை இணைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்படுகிறார்கள். சீனப் பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதைத் தடுக்க உத்தரவிடும்படியும் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், இந்தியாவின் குடிசைத் தொழில்களை அழிக்கும் வகையில் சீனப் பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளைபெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சீனப் பட்டாசுகளைப் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்க அரசும், சிபிஐ-யும் அதிரடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

விசாரணை ஒத்திவைப்பு

தீபாவளியையொட்டி சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்து, விற்பனை செய்வதைத் தடுக்க, சீனப் பட்டாசுகளை கண்டுபிடிக்கவும், அவற்றைப் பறிமுதல் செய்து அழிப்பதற்காகவும் தனிப்படை அமைக்க வேண்டும். அந்தப் படையின் உறுப்பினர்கள் யார், யார், எத்தனை சிறப்புப் படைகள் அமைக்கப்பட உள்ளன என்ற விவரத்தை வரும் 26-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in