

அரசியல் லாபத்திற்காகவும், தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்யும் நோக்கிலும், தடுப்பூசிகளின் சர்வதேச வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசிகளை அவசரக் கோலத்தில் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வருகிறதோ என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கை:
''கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பது வரவேற்புக்குரியது. இந்திய விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகள். கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சியில் உலக அளவில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
# இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளைப் போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்புக்குரியது. பாராட்டுக்குரியது. அனைவருக்கும் இத்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது.
எனினும் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் தடுப்பூசிகளை அனைவருக்கும் போட வேண்டும். அப்பொழுதுதான் சமூக எதிர்ப்பு சக்தியை (Herd Immunity) தடுப்பூசிகள் மூலம் பெற முடியும். முழுமையான பயனைப் பெற முடியும். இந்தக் கால வரம்பு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
# தடுப்பூசிகள் கரோனா தடுப்பில் மகத்தான பங்காற்றும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்குவதில் கூடுதல் கவனம் வேண்டும்.
# இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ள கோவிட் தடுப்பூசிகளின் திறன், பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் ( Clinical Trials) முடிவுகளை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும். அது பல நாட்டு மருத்துவர்கள் மற்றும், உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
# கோவிட் தடுப்பூசிகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிடாமல், அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது அவநம்பிக்கைகளையே உருவாக்கும்.
# இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காதது, சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.
# அரசியல் லாபத்திற்காகவும், தடுப்பூசிகளை உருவாக்கியுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்யும் நோக்கிலும், தடுப்பூசிகளின் சர்வதேச வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசிகளை அவசரக் கோலத்தில் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வருகிறதோ என்ற ஐயத்தை உருவாக்குகிறது.
# ஏற்கெனவே மத்திய அரசு சென்ற ஜூலை மாதமே, இரண்டாம் கட்டப் பரிசோதனைகள் கூட தொடங்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்தது. முழுமையான சோதனைகள் முடியாமல் இதுபோன்று அவசரக் கோலத்தில் அறிவியலுக்குப் புறம்பாகத் தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது எனக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த அறிவிப்பை மத்திய அரசு கைவிட்டது. அதே போன்ற முயற்சியை தற்பொழுதும் மேற்கொள்வது சரியல்ல.
# கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் முடியாத நிலையிலும், அதன் முதல் கட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக வெளியிடப்படாத நிலையிலும், அதன் திறன் குறித்த எந்தவிதமான குறைந்தபட்ச விவரங்கள் கூட வெளியிடப்படாத நிலையிலும் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சரியல்ல. சோதனைகள் முழுமை பெற்று, முடிவுகளை வெளிப்படையாக அறிவித்த பிறகே அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
# பயனாளிகளுக்கு எந்த நிறுவனத்தின் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.
# ஒரு நபருக்கு முதல் டோஸாக எந்தவகை தடுப்பூசி வழங்கப்பட்டதோ, அதே தடுப்பூசியையே இரண்டாம் டோஸாகவும் வழங்கிட வேண்டும். மாற்றி வழங்கிடக் கூடாது.
# முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பரிசோதனைகளில, தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என அரசு அறிவித்துள்ள போதிலும், பயனாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். ஏனெனில் இப்பொழுது, கோவேக்சின் மூன்றாம் கட்டப் பரிசோதனைகள் நடைபெறும் பொழுதே, மருத்துவப் பணியாளர்களுக்கு அத்தடுப்பூசியை வழங்குவதும் மூன்றாம் கட்டப் பரிசோதனை போன்றதுதான்.
எனவே,covaxin phase 3 பரிசோதனைகளுக்கு உள்ளாகும் தன்னார்வலர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணம் போன்று தற்பொழுது தடுப்பூசியைப் போட்டுக் கொள்வோர் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
# தடுப்பூசிகளைப் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
# தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
# மருத்துவ மற்றும் மருந்து ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.
# இந்தியா முழுவதும் ஏராளமான வைரஸ் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க வேண்டும்.
# தடுப்பூசிகள் குறித்து தவறான, அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
# தடுப்பூசிகள் குறித்தும் நவீன அறிவியல் மருத்துவத்தின் மீதும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்திட வேண்டும். அமைச்சர்களும். முக்கிய அரசுப் பதவிகளில் இருப்போரும், மூட நம்பிக்கைகளைப் பரப்பிடக் கூடாது.
# அம்மா மினி மருத்துவமனைகள் என்பது தமிழக அரசின் திட்டமல்ல. இது மத்திய அரசின் திட்டமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். நாடு முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தனியார் மயமாக்கும் நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. இம்மையங்களின் பெயர்களை "சுகாதார மற்றும் நல மையங்கள் ( Health and Wellness Centres) எனப் பெயர் மாற்றம் செய்துவருகிறது.
அதே திட்டத்தைதான் தமிழக அரசு "அம்மா மினி கிளினிக் " என்ற பெயரில் செயல்படுத்துகிறது. எனவே, இது தமிழக முதல்வர் கூறுவதுபோல் தமிழக அரசின் திட்டமும் அல்ல. இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டமும் அல்ல.
# அம்மா மினி கிளினிக்குகளுக்கு நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை ஊழியர்களைப் பணி நியமனம் செய்திட வேண்டும்.
எட்டு மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும். அதைத் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் கோரமாட்டோம் என "உறுதிமொழிப் பத்திரம் "எழுதி வாங்குவது கண்டனத்திற்குரியது.
அதைக் கைவிட வேண்டும். ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை மினி கிளினிக்குகளில் செய்து கொடுத்திட வேண்டும்.
# ஏற்கெனவே செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டும்.
# 15 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை உருவாக்க வேண்டும்.
# ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில், பணிக்குச் செல்லும் பொழுது இ-பாஸ் இல்லை எனத் தவறான குற்றச்சாட்டை வைத்து, மருத்துவர் சதீஷ்குமார் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.
# கரோனா பரவும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அப்போராட்டத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்''.
இவ்வாறு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.