

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாரச்சந்தை சேறும், சகதியுமாக மாறியதால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
காரைக்குடி கணேசபுரம் வாரச்சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை கூடுகிறது. இங்கு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர்.
இங்கு காரைக்குடி நகர் மட்டுமின்றி சங்கராபுரம், இலுப்பக்குடி, மாத்தூர், அரியலூர், ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர்.
இருபதாயிரம் மக்கள் கூடும் இச்சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. சந்தை முடிந்ததும் கொட்டப்படும் குப்பை முறையாக அகற்றுவதில்லை.
கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. தற்போது அப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
இதனால் நேற்று கடைகள் வைப்பதற்கு வியாபாரிகளும், நடந்து செல்வதற்கு பொதுமக்களும் சிரமப்பட்டனர். சந்தையை குத்தகைக்கு விடும் அறநிலையத்துறையினர், அதை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.