

”முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி சிதம்பரம் கார்களில் வலம் வருவார்கள். ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்று கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் புலியடிதம்பம், முடிக்கரை, மறவமங்கலம், சூராணம் ஆகிய இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார்.
கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது:
தற்போது பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் என்று சொல்லி கொள்கின்றனர்.
அவர்கள் அரசுக்கு எதிராகப் போராடுவதையே நோக்கமாக வைத்துள்ளனர். அவர்களுக்கு கலப்பை எடுத்து உழவு செய்ய தெரியுமா? ஆனால் நானும், முதல்வரும் இன்றும் விவசாயம் செய்து வருகிறோம்.
மு.க.ஸ்டாலின் புதிய சாலை அமைத்து தான் விவசாயி சந்திக்க செல்கிறார். ஆனால் நாங்கள் வேட்டியை மடித்து கட்டி சகதியில் இறங்கி விவசாயிகளை சந்திக்கிறோம்.
தேர்தல் வந்துவிட்டதால் வாக்குக்காக அரசியல்வாதிகள் பொய் சொல்வார்கள். நீங்கள் அதை நம்பாதீர்கள். நல்லவர்களை அறிந்து தேர்ந்தெடுங்கள்.
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் நிலசுவான்தாரர்கள், கார்களில் வலம் வருவார்கள், ஆனால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். நாங்கள் கிராமம், கிராமாக சென்று மக்களிடம் குறை கேட்டு நிவர்த்தி செய்கிறோம், என்று கூறினார்.
முன்னாள் எம்பி செந்தில்நாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சரண்யா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ராஜா, ராஜேந்திரன், மனோகரன், கோபி, ரங்கசாமி, கருணாகரன், சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.