Last Updated : 04 Jan, 2021 06:29 PM

 

Published : 04 Jan 2021 06:29 PM
Last Updated : 04 Jan 2021 06:29 PM

தூத்துக்குடியில் 4,92,818 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு; ரூ.2500 விநியோகம் தொடக்கம்: ரூ.123 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 4,92,818 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2500 ரொக்கப் பணம் விநியோகம் இன்று தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் தொகுப்பும், ரூ.2500 ரொக்கப் பணமும் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் இன்று தொடங்கியது. கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் விநியோகத்தை ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர் தலைமை வகித்தார். துணைப்பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் சேஷகிரி, நிர்வாக மேலாளர் அந்தோணி பட்டுராஜ், வட்ட வழங்கல் அலுவலர் வதனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள 960 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,92,818 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வீதம் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் ரூ.123 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்படுகிறது.

பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தை வாங்க மக்கள் காலை முதலே நியாயவிலைக் கடைகளில் குவிந்தனர். ஏற்கனவே டோக்கன் கொடுக்கப்பட்டவர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்பட்டன. மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதேபோல் இலவச வேட்டி சேலை விநியோகமும் நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் மொத்தம் 3,85,030 வேட்டிகள் மற்றும் 3,85,413 சேலைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 88 லட்சத்து 7 ஆயிரத்து 136 ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x