

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமைச்சர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரே விமானத்தில் வந்த இருவரும், ஒரே காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்காக இருவரும் இன்று பிற்பகல் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.எம்.ராஜலெட்சுமி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், தென்மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஜஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், நெல்லை எஸ்பி மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மேலும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனியசாமி, தேர்தல் பார்வையாளர் நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் பெருமளவில் திரண்டு முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்றனர்.
விமான நிலையத்துக்கு வெளியே காவல் துறையினர் அளித்த அணிவகுப்பு மரியைதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். பின்னர் முதல்வரும், துணை முதல்வரும் ஒரே காரில் ஏறி திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சிறு விபத்து:
முதல்வர் மற்றும் துணை முதல்வர் பயணித்த காருக்கு பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனம் வல்லநாடு பஜார் பகுதியை கடந்து 50 மீட்டர் சென்ற நிலையில் பாதுகாப்பு வாகனத்தை தொடர்ந்து சென்று கொண்டிருந்த அதிமுகவினரின் வாகனத்துக்கு குறுக்கே கன்றுக்குட்டி ஒன்று திடீரென வந்துவிட்டது.
கன்றுக்குட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக காரில் சென்ற கட்சியினர் திடீரென பிரேக் பிடித்ததில் அந்த வாகனத்துக்கு பின்னால் வந்த கார், முன்னிருந்த கார் மீது அடுதடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்சியினர் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
உடனடியாக அவர்கள் அனைவரும் விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு, அதை பின்தொடர்ந்து வந்த மற்ற வாகனங்களில் ஏறி நெல்லை புறப்பட்டுச் சென்றனர். இந்த விபத்தால் வல்லநாடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.