

ஓசூர் - பெங்களூரு இடையே புதிய காலநேரப் பட்டியலில் மெமு மின்சார ரயில் மற்றும் டெமு டீசல் ரயில்களின் இயக்கம் தொடங்கியுள்ளது.
1962-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதையுடன் தொடங்கப்பட்ட ஓசூர் ரயில் நிலையம், 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1997-ம் ஆண்டு அகலப்பாதை ரயில் நிலையமாக மாற்றப்பட்டது. ஓசூர் நகரின் வேகமான வளர்ச்சிக்கேற்ப இந்த ரயில் நிலையத்தை தினமும் சராசரியாக 8 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தென்மேற்கு ரயில்வே பெங்களூரு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் உள்ள ரயில் நிலையமாக ஓசூர் ரயில் நிலையம் வேகமாக வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மின்பாதை வசதி உள்ள ரயில் நிலையமாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்துக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதியன்று ஓசூர் - பெங்களூரு இடையே மின்சார ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது ஓசூர் - பெங்களூரு இடையே புதிய காலநேரப் பட்டியலில் கூடுதலாக மின்சார ரயில் இயக்கத்தைத் தென்மேற்கு ரயில்வே தொடங்கி உள்ளது.
இந்தப் புதிய பட்டியல்படி நேற்று காலை பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மெமு மின்சார ரயில் (எண்-06261), இன்று காலை 11 மணிக்கு ஓசூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த மின்சார ரயில் (எண்-06260) மதியம் 12 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நகரப் பகுதிகளுக்குச் செல்ல மெட்ரோ ரயில் இணைப்பு வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில் (எண்- 0659) மதியம் 2.45 மணிக்கு ஓசூர் ரயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த மின்சார ரயில் (எண்-06262) மாலை 4 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இதில் ஓசூர் - பெங்களூரு மெஜஸ்டிக் வரை இயக்கப்படும் மின்சார ரயிலுக்கு ரூ.20 பயணக் கட்டணமாகவும், ஓசூர் - பையப்பனஹள்ளி வரை இயக்கப்படும் மின்சார ரயிலுக்கு ரூ.15 பயணக் கட்டணமாகவும் உள்ளது. மேலும் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு இயக்கப்படும் டெமு ரயில் (டீசல் எண்-06277) இரவு 7.45 மணிக்கு ஓசூர் வந்தடைகிறது.
அதேபோல தருமபுரியில் இருந்து யஸ்வந்த்பூர் வரை இயக்கப்படும் டெமு ரயில் (எண்- 06278) காலை 6.29 மணிக்கு ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாட்கள் மட்டுமே இந்த மெமு மின்சார ரயில்கள் மற்றும் டெமு டீசல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.