சட்டப்பேரவைத் தேர்தல்; ஒரே நாளில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தல்; ஒரே நாளில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தவும், 80 வயது மூத்த வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்கு முறையை ரத்து செய்தும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தற்போதுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையின் காலம் மே மாதத்தில் நிறைவடைகிறது. அடுத்த சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் மே மாதம் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான தயாரிப்புப் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழு கடந்த டிச.21-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து, அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. அத்துடன் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட 80 வயதும் அதற்கு மேற்பட்ட வயதானவர்களும், அஞ்சல் வாக்கு செலுத்தலாம், இந்த அஞ்சல் வாக்குகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று பெற்று வரலாம் என்கிற முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்திட தேர்தல் ஆணையம் கருதுவதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது நிலையை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டிய தேவை எழாதபோது, கரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி, ஆளும் தரப்புக்குச் சாதகமான சூழல் உருவாக்க இரண்டு கட்டத் தேர்தல் என்ற கருத்தோட்டம் ஊடகங்களில் கசிய விடப்படுகிறதோ என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில் சந்தேக நிழல் தேர்தல் ஆணையத்தின் மீது விழுந்து விடாமல் எச்சரிக்கையாகச் செயல்படுவது அவசியம் என்பதை கவனப்படுத்துகிறோம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தவும், எண்பது வயது மூத்த வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்கு முறையை ரத்து செய்தும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in