Published : 04 Jan 2021 03:19 PM
Last Updated : 04 Jan 2021 03:19 PM

இறுதியான பரிசோதனை மேற்கொள்ளும் முன் தடுப்பூசி; மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து யோசிக்கவேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து, மக்கள் உயிர்க் காப்புப் பிரச்சினையாகும், இறுதியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்முன் இந்தியாவின் தடுப்பூசிகளான கோவி ஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் போடுவதுபற்றி மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து யோசிக்கவேண்டும் என தி.க. தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து தி.க. தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“கரோனா (கோவிட் - 19) தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள், கடந்த ஓராண்டு காலமாக அச்சத்தின் பிடியிலும், மரணத்தின் வாயிலிலும் இருந்த மனித குலத்திற்கு ஒரு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது.

கரோனா தடுப்பூசி வரவேற்கத்தக்கது

வெளிநாடுகளில் உள்ள பிரபல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களான ஃபைசர் (Pfizer), மாடெர்னா, அஸ்ட்ரா செனிகா போன்ற நிறுவனங்கள் கண்டுபிடித்த தடுப்பூசிகளும், நம் நாட்டில் (இந்தியாவில்) சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டியா, (Serum Institute of India (SII)) கண்டுபிடித்துள்ள கோவி ஷீல்டு, பாரத் பையோடெக் கண்டுபிடித்துள்ள கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளும் மக்களிடையே போடப்படும் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊசிகள் இங்கிலாந்து மற்றும் சில வெளிநாடுகளில் போடவும் - மூன்று கட்ட பரிசோதனைகளையெல்லாம் தாண்டி - திருப்தியடைந்து ஆங்காங்கே போடத் தொடங்கிடும் நிலையில், நமது நாட்டில் நமது இரண்டு நிறுவனங்களது தடுப்பூசிகளான கோவி ஷீல்டு, கோவேக்சின் கரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அதற்குமுன் தடுப்பூசி போடும் முறைக்கான ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டு வருவதும் வரவேற்கத்தக்கதே.

விதிவிலக்கு ஏன்?

இதில் நமது நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்துள்ளது மிகவும் நம்பிக்கை ஊட்டுகிறது. நம் நாட்டு இரண்டு தடுப்பூசிகளை இவ்வளவு விரைவாக முயற்சி எடுத்து மக்களுக்குப் பயன்படச் செய்யும் முயற்சி சிறப்பானது. இதற்குக் காரணமான விஞ்ஞானிகள் நம்முடைய மிகுந்த பாராட்டுதலுக்கும், வாழ்த்துதலுக்கும் உரியவர்கள்.

பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் போன்றோர் இதில் தீவிர ஆர்வம் காட்டி, வேகப்படுத்தியது இதற்கு முக்கிய காரணம் என்றாலும், நம் நாட்டு ஆராய்ச்சியின் அறிவியல் அறிவு மற்றவர்களுக்குக் குறைவானதல்ல என்ற உண்மையை உலகுக்குக் காட்டுவதாகவும் உள்ளது என்றாலும், இந்தப் பரிசோதனைகளில் சிலவற்றிற்கு விதிவிலக்குத் தந்திருப்பது (அதாவது தவிர்த்திருப்பது) மக்களிடையே ஒருவகை அய்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மறைக்கப்படக் கூடாத உண்மையாகும்.

சரியான தரவுகள், Data என்ற ஆதாரப் புள்ளிவிவரங்கள் தந்து போட்டி உலகில் நம் நாட்டு விஞ்ஞானிகளின் அறிவு வென்றது என்று காட்டவேண்டிய விவேகம், மிகவும் முக்கியமானதல்லவா? வேகத்தைவிட விவேகம் முக்கியம். ஏனெனில், இது மக்களின் உயிர்ப் பாதுகாப்புப் பிரச்சினை அல்லவா?

மூன்றாவது கட்ட பரிசோதனையும் மிகவும் முக்கியமாகும். இது ஒரு சூதாட்டப் பந்தய முயற்சிபோல் ஆகிவிடாத பாதுகாப்புடன் ஆதாரப்பூர்வமான நம்பிக்கையை அளிப்பதே சிறப்புடையதாகும். ‘எந்த ஒரு நாடும் கரோனா தடுப்பூசியின் கட்டாய நடைமுறையைக் கைவிடவில்லை’என்றுள்ள நிலையில், தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவனம் வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்துமா?

நிபுணர் குழு முன் சமர்ப்பித்தபடி, 3 ஆவது கட்ட மருத்துவப் பரிசோதனைகளை முடிக்கவில்லை. பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்து தர மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இவை கட்டாய தேவையாகும். தலைமை மருந்து கட்டுப்பாடு அதிகாரியின் கருத்தும் குழப்பமாக உள்ளது.

கட்டாயம் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளையும், தேவைகளையும் கைவிட்டது தொடர்பாக சுகாதார அமைச்சம் காரணங்களைக் கூறி தெளிவுபடுத்தவேண்டும். ஏனென்றால், ‘‘இது முன்னுரிமைப்படி, தடுப்பூசி போட்டுக் கொள்கின்ற முன்களப் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பானது.

இவ்வாறு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ள கருத்தினையும் விருப்பு வெறுப்பின்றி மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு பரிசீலிக்க வேண்டியதும் அவசியம். அலட்சியப்படுத்தக் கூடாது. ‘செய்வன திருந்தச் செய்’ என்பது நம் தமிழ்நாட்டு அறநூல் பாட நூல்களில் முதல் அடி அல்லவா?

இந்தப் பாராட்டத்தக்க உயிர் காக்கும் முயற்சியில், வேகத்தைவிட விவேகம் - பாதுகாப்புக்கான தரவுகள் மிகமிக முக்கியமாகும். இதை மத்திய - மாநில அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு, தடுமாற்றமோ, ஏமாற்றமோ இல்லாத - தற்சார்பு வெற்றியை உறுதிப்படுத்த முன்வரவேண்டும்”.

இவ்வாறு கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x