Published : 04 Jan 2021 01:22 PM
Last Updated : 04 Jan 2021 01:22 PM

பொன்மலை ரயில்வே பணிமனையில் மே நாள் விடுமுறை கிடையாது என அறிவிப்பு: வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

பொன்மலை ரயில்வே பணிமனையில் மே நாள் விடுமுறை கிடையாது என்ற அறிவிப்புக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஜன.04) வெளியிட்ட அறிக்கை:

"உலகம் முழுவதும் மே முதல் நாள், தொழிலாளர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் அண்ணா 1967இல் முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, தொழிலாளர் உரிமைத் திருநாளான மே 1ஆம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்துப் பெருமை சேர்த்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பு ஏற்ற கருணாநிதி மே நாள் விடுமுறை தொடர்வதற்கு உத்தரவிட்டார்.

1990ஆம் ஆண்டு மே நாளின் நூறாவது ஆண்டு விழாவை, உலகம் முழுமையும், தொழிலாளர்கள் வெகு உற்சாகத்தோடு கொண்டாட ஏற்பாடுகள் செய்தபோது, அப்போதைய பிரதமர் வி.பி.சிங் முன்னிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் பேசும்போது, இந்தியா முழுமையும் மே நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரினேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா, ஜனதா தளத்தைச் சேர்ந்த கமல் மொரார்கா ஆகியோர் ஆதரித்துப் பேசினார்கள். உடனே பிரதமர் வி.பி.சிங், இந்திய அரசு, மே நாளுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கும். 1990, மே முதல் நாள் நடைமுறைக்கு வருகின்றது என்று அறிவித்தார்.

தற்போதைய பாஜக அரசு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, 44 சட்டங்களை 4 தொகுதிகளாக மாற்றுவதற்கு முனைந்து வருகின்றது.

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேரம் வேலை என்பதை பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களில் 12 மணி நேரமாக அதிகரித்து, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே எதேச்சதிகார முயற்சியில் மத்திய பாஜக அரசும் ஈடுபட்டுள்ளது.

ரயில்வே துறையில் தொழிலாளர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இதுவரையில் மே நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறையை ரத்து செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இதனை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

2021 விடுமுறை நாள் பட்டியலில் மே நாளுக்குப் பொது விடுமுறை நாள் உண்டு என, பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x