

நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் முதல்கட்டத்தை நிறைவு செய்துள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 74 பேரவைத் தொகுதிகளில் 3,750 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ என்ற பெயரில் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்கட்ட பயணத்தை தொடங்கிய அவர், நேற்று முன்தினம் திருச்சியில் நிறைவு செய்தார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்கட்ட பயணத்தை நிறைவு செய்துவிட்டு, நேற்று சென்னை திரும்பிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பயண விவரங்களை தெரிவித்தார். அவருக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
‘நமக்கு நாமே’ பயணம் குறித்து நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை அறிய, குறைகளை கேட்கவே நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தொடங்கியுள்ளேன்.
முதல்கட்ட பயணம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 11 மாவட்டங்களில் உள்ள 74 தொகுதிகளுக்கு 13 நாட்களில் 3 ஆயிரத்து 750 கி.மீ. பயணம் செய்துள்ளேன். சைக்கிள், ஆட்டோ. ஜீப், கார், வேன் என பல்வேறு வாகனங்களில் பயணித்து மக்களை சந்தித்தேன். மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்தேன். அவர்கள் காட்டிய அன்பும் ஆதரவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
நான் விதவிதமான ஆடைகள் அணிவது குறித்து பலரும் பேசுகின்றனர். கட்சி நிகழ்ச்சிகள் தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளில் எப்போதும் வண்ண ஆடைகளையே அணிந்து வருகிறேன். இளைஞர்கள் விரும்பும் ஆடையில் இருந்தது அவர்களில் ஒருவராக எண்ண வைத்தது. மக்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தது மறக்க முடியாத அனுபவம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின், தனது 2-வது கட்ட விடியல் மீட்பு பயணத்தை வரும் 7-ம் தேதி நீலகிரியில் தொடங்கி 18-ம் தேதி கடலூரில் நிறைவு செய்கிறார்.