

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வைப்பு நிதி பற்றி யாரும் பேசாதது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமேஸ்வரம் மற்றும் சிவகாசியில் நடந்த ‘மக்களுக்காக மக்கள்பணி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலை யத்தில் அவரை பேட்டி எடுக்கச் சென்ற நிருபர்கள், நடிகர் சங்க தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜயகாந்த், “தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ரூ.4 கோடி கடன் இருந்தது உண்மை தான். ஆனால் நடிகர் சங்கத்தின் வைப்பு நிதியாக ரூ.1 கோடிக்கு மேல் இருந்தது, அதைப் பற்றி யாருமே பேசாதது ஏன்?” என்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழஞ்சலி விழாவில் கலந்து கொள் வதற்காக கயத்தாறு சென்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விஜயகாந்த் வந்த அதே விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய வைகோ, “ஆந்திர சிறைகளில் தமிழர்கள் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அம்மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பேசவேண்டும் என்று பல முறை அனுமதி கேட்டபோது அவர் கொடுக்கவில்லை” என்றார்.