Last Updated : 04 Jan, 2021 11:53 AM

 

Published : 04 Jan 2021 11:53 AM
Last Updated : 04 Jan 2021 11:53 AM

கூடுதல் நிதிச் சுமையையும் தாங்கிக்கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தினோம்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு

மக்களுக்காக கூடுதல் நிதிச் சுமையையும் தாங்கிக்கொண்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது என, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்காக அரிசி ரேஷன் கார்டுகள் மற்றும் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.2,500 மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுநீள செங்கரும்பு ஒன்று, தலா 20 கிராம் உலர் திராட்சை, முந்திரி பருப்பு மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 3,355 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,225 ரேஷன் கடைகள் மூலம் ஜன.4-ம் தேதி முதல் ஜன.13-ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்ட தொடக்க விழா பாலக்கரையில் உள்ள சிந்தாமணி கிடங்கு வளாகத்தில் இன்று (ஜன.04) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் அரசின் விலையில்லா வேட்டி-சேலைகள் ஆகியவற்றை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

அமைச்சர் என்.நடராஜன் பேசும்போது, "கரோனா ஊரடங்கால் பலரும் வேலைவாய்ப்பை இழந்திருந்ததாலும், அடுத்தடுத்து வீசிய புயல்களால் டெல்டா பகுதி மக்கள் பாதிக்கப்பட்டதை நன்கு உணர்ந்தே மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், கூடுதல் நிதிச் சுமையையும் தாங்கிக் கொண்டு வியத்தகு பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு செயல்படுத்தியுள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.பழனிகுமார், திருச்சி மாவட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப் பதிவாளர் கு.பொ.வானதி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் நா.பத்மகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஜி.சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x