

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜி இன்று ராஜ்பவனில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் முதல்வர், துணை முதல்வர், முன்னாள் நீதிபதிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஏ.பி.சாஹி ஓய்வுபெறுவதை அடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் இந்தப் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் டிச.31 அன்று வெளியிட்டது.
தலைமை நீதிபதி ஜன.4 அன்று பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவேண்டும் என்பது மரபு. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சஞ்ஜிப் பானர்ஜிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சரியாக 9.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவி ஏற்றுக்கொண்டார்.
கரோனா தடுப்பு விதிகள் காரணமாக தனிமனித இடைவெளியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், கேரள முன்னாள் ஆளுநருமான சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் எனப் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற சஞ்ஜிப் பானர்ஜிக்கு அனைவரும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் 1862-ல் நிறுவப்பட்டது. இன்று தலைமை நீதிபதியாகப் பதவியேற்பதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திரத்திற்குப் பிறகான 31-வது தலைமை நீதிபதியாகவும் சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றுள்ளார்.
சஞ்ஜிப் பானர்ஜி - சில குறிப்புகள்:
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி 1961-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தபின் 1990-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
கொல்கத்தா, டெல்லி, ஜார்க்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகத் தொழில் செய்து சிவில், நிறுவனச் சட்டங்கள், சமரசத் தீர்வு, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவராகத் திகழ்ந்தார்.
2006-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.