தமிழக ரேஷன் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: இன்று தொடங்கியது

சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள டி.யு.சி.எஸ். ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். | படம்: எல்.சீனிவாசன்.
சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள டி.யு.சி.எஸ். ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். | படம்: எல்.சீனிவாசன்.
Updated on
1 min read

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூபாய் 2,500 வழங்கப்படும் என, கடந்த டிச.19, 2020 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இத்திட்டம், ஜன. 4 (இன்று) முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். அத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு நல்ல துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 5,604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, டிச.21 அன்று தலைமைச் செயலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை அடையாளமாக சிலருக்கு வழங்கி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிச் செல்ல வேண்டும். அறிவித்தபடி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (ஜன.4) தொடங்கியது. ரேஷன் கடைகளில் ஜன.13 வரை காலையில் 100 பேர், மதியம் 100 பேருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in