

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், மீண்டும் புதிய கட்சி தொடங்கமுடிவெடுத்துள்ளார். இதுகுறித்தஅறிவிப்பை பொங்கல் பண்டிகையன்று வெளியிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும், நடிகர் விஜய்யின்தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த நவம்பர் 5-ம் தேதி ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல்கட்சி பதிவு செய்தார். பொருளாளராக தனது மனைவி ஷோபா உட்பட முக்கிய நிர்வாகிகளையும் அறிவித்தார். இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த விஜய், ‘‘எனக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேரக் கூடாது’’ என்று அறிவித்தார். எஸ்ஏசி நியமித்த அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தார். இயக்கத்தின் பெயர், கொடி, புகைப்படம் உள்ளிட்டவற்றை சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இதற்கிடையில், சங்கம் தொடங்குவதாக கூறி தன்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டதாக கூறி பொருளாளர் பொறுப்பில் இருந்து ஷோபா விலகினார். இதுபோன்ற தொடர் சிக்கல்களால் கட்சி தொடர்பான பணிகளை நிறுத்தினார் எஸ்ஏசி.
இரண்டே மாதத்தில் மீண்டும்..
இந்நிலையில், தற்போது விஜய்ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள எஸ்ஏசி, மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள எஸ்ஏசியின் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. இதில் மன்றத்தின் அதிருப்தி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆலோசனைக்கு பிறகு உடனடியாக 20 மாவட்ட பொறுப்பாளர்களையும் எஸ்ஏசி நியமித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்ஏசியிடம் கேட்டபோது, ‘‘நிறைய திட்டமிடல்கள் நடந்து வருகின்றன. இது மார்கழி மாதம். இப்போது அதுபற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன். தை பிறக்கட்டும். 14-ம் தேதி அனைவரையும் அழைத்து நல்ல சேதி சொல்கிறேன்’’ என்றார்.
விஜய் தரப்பில் கேட்டபோது, ‘‘எஸ்ஏசி கட்சிக்கு எந்த ஆதரவும்இல்லை. விஜய்யை பொருத்தவரை, தந்தையின் கட்சிக்கு ஆதரவுஇல்லை என்ற அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்’’ என்றனர்.
கட்சி பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் சில எஸ்ஏசி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ‘எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ அல்லது‘அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்’என்பது கட்சிப் பெயராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரஜினியின் முடிவு காரணமா?
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், தனது கட்சிப் பணிகளை எஸ்ஏசி நிறுத்தி வைத்திருந்தார். ரஜினி வரவில்லை என்பது ஊர்ஜிதமான பிறகு, நன்கு திட்டமிட்டே மீண்டும் பணியை தொடங்கியுள்ளார். வருங்காலத்தில் மகன் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் அவர் உறுதியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.