Published : 27 Oct 2015 10:55 AM
Last Updated : 27 Oct 2015 10:55 AM

உங்கள் குரல்: குவஹாட்டி விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டிகள் ஆக்கிரமிப்பு

குவஹாட்டி விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டிகள் ஆக்கிரமிப்பு

சென்னை

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக குவஹாட்டிக்கு இயக்கப்படும் குவஹாட்டி விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மற்றவர்கள் ஆக்கிரமித்துவிடுகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் எம்.பிரதீப் கூறியிருப்பதாவது:

கூட்ட நெரிசல் இன்றி குடும்பத்துடன் வசதி யாக பயணம் செய்யவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணம் செய்கிறோம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வழியாக குவஹாட்டிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் பயணம் செய்தேன். முன்பதிவு செய்யப்பட்ட அந்த பெட்டியில் 500 பேர் வரை குவிந்திருந்தனர். சில இருக்கைகளில் முன்பதிவு செய்தவர்களுக்கே இடம் கொடுக்கவில்லை. மொழி தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக புகார் அளிக்க நினைத்தால் ரயில்வே அலுவலர்கள் யாரும் அங்கு வரவில்லை. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, இதனைத் தடுக்க ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பயணியின் புகார் குறித்து ஆய்வு செய்து, ரயில்வே பாதுகாப்பு படை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

***

திருமுல்லைவாயலில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை

சென்னை

திருமுல்லைவாயல், விவேகானந்தா நகர், சூரியகாந்தி தெருவில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, எம்.சிவனேசன் என்ற வாசகர் ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் உள்ளது சூரியகாந்தி தெரு. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், இங்கு முறையான சாலை வசதி செய்யப்படவில்லை. இதனால், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

சிறிய மழைக்கே சாலைகள் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் நடப்பதற்கே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள பல தெருக்கள் தார் சாலையாக செப்பனிடப்பட்ட நிலையில், சூரியகாந்தி தெருவில் மட்டும் சாலை செப்பனிடப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

இதுகுறித்து, கவுன்சிலர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு சிவனேசன் கூறினார்.

இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, திருமுல்லைவாயல் பகுதியில் தற்போது ஒவ்வொரு பகுதியாக சாலைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் சூர்யகாந்தி தெருவும் செப்பனிடப்படும் என்றார்.

***

புதிய சம்பள கமிஷன் பரிந்துரை: கிராமப்புற அஞ்சல் ஊழியர் வேண்டுகோள்

சென்னை

புதிய சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களையும் சேர்க்க வேண்டும் என்று ‘தி இந்து’ உங்கள் குரலில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக கிராமப்புற அஞ்சல் ஊழியர் இ.ராஜாராம், ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

அஞ்சல் துறையில் சுமார் 4 லட்சம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் (ஜிடிஎஸ்) பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அஞ்சல் துறையின் மற்ற ஊழியர்களைப்போல எந்த சலுகையும் பெற முடியாது. இஎஸ்ஐ, பி.எஃப் போன்ற வசதிகள் கிடையாது. சம்பள கமிஷனின் பரிந்துரைகளில் நாங்கள் வரமாட்டோம்.

ஒரு நாளைக்கு 9 மணி நேரத்துக்கு மேலாக பணியாற்று கிறோம். எங்களை நிரந்தரமாக்குவதாக பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூறின. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு ஓய்வூதியம் இல்லை. உரிய காலத் தில் பணி ஓய்வும் தர மறுக்கின்றனர். மேலும் சம்பளக் கமிஷ னின் பரிந்துரையின்படி ஜனவரி முதல் ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. அப்படி நடந்தால், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களையும் புதிய சம்பளக் கமிஷனின் பரிந்துரைக்குள் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அஞ்சல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கென்று என்னென்ன சலுகைகள் வழங்க வேண்டுமோ அவை அனைத்தும் வழங்கப் படுகிறது. அதிக நேரம் பணிபுரிய வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. சில இடங்களில் ஆள் பற்றாக்குறை காரணத்தால் அப்படி நடக்கலாம். சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும்’’ என்றார்.

அன்புள்ள வாசகர்களே.. ‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x