

மினி கிளினிக்குகளில் பணியில் சேரும் செவிலியர்களிடம் எதிர்காலத்தில் அரசு வேலையாக நிரந்தரம் செய்ய கோரமாட்டேன் என்று எழுதி வாங்கிக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், தலைவலி உட்பட சிறிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர். இதற்கிடையில், மினி கிளினிக் நிரந்தர அரசு பணி எனக் கூறி செவிலியர்களிடம் சிலர் பணம் பறித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளதாவது:
புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன செவிலியர்களே.
எனவே, அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தர பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிரந்தரமற்ற இந்த தனியார் ஒப்பந்த பணிக்கு செவிலியர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மினி கிளினிக் பணியில் சேருபவர்களிடம், இந்தபணி தனியார் மூலம் செய்யப்படும் தற்காலிகமான நியமனம் ன்பதை நான் அறிவேன். அரசுவேலையாக நிரந்தரம் செய்யக்கோரி எதிர்காலத்தில் கோர மாட்டேன் என எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் பணியில் சேர்ந்தது தொடர்பான அறிக்கை, அவர்கள் எழுதி கொடுத்த சான்றிதழின் நகல் ஆகியவற்றை சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.