Last Updated : 03 Jan, 2021 09:10 PM

 

Published : 03 Jan 2021 09:10 PM
Last Updated : 03 Jan 2021 09:10 PM

சிவகங்கை அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு பாதை விட மறுப்பு: அதிகாரிகள் முன்னிலையில் வேலியை உடைத்து சென்ற உறவினர்கள்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு, பாதை விட சிலர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திமடைந்த இறந்தவரின் உறவினர்கள் அதிகாரிகள் முன்னிலையில் வேலியை உடைத்து பிரேதத்தை எடுத்துச் சென்றனர்.

திருக்கோஷ்டியூர் அருகே பிராமணப்பட்டியில் 350 குடும்பம் வசிக்கிறது. இக்கிராமத்திற்குரிய மயானம் விவசாய நிலப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் மயானத்திற்கு சென்று வந்த பாதையை தனியார் ஒருவர் தனக்கு சொந்தமானது எனg கூறி முள்வேலியால் அடைத்தார். மேலும் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55) என்பவர் டிச.30-ம் தேதி சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

ஆனால் மயானப்பாதையை அடைத்தவர்கள், பாதையை விட மறுத்துவிட்டனர். இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடமும் கோட்டாட்சியர் சுரேந்திரன், டிஎஸ்பி பொன்ரகு, வட்டாட்சியர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீர்வு எட்டப்படாதநிலையில் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் பாதையில் இருந்த கம்பி வேலிகளை உடைத்துவிட்டு பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோட்டாட்சியர் சுரேந்திரன் கூறுகையில், ‘நீதிமன்றத்தில் பாதை தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்,’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x