

காந்தி கிராம பல்கலைக்கழகப் பட்டயப் படிப்புகளில் சேர பழைய கல்வித் தகுதியைப் பின்பற்ற வேண்டியதில்லை. கல்வித் தகுதியை நிர்ணயிக்க பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய உயர் நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெ.ஜனனி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை துப்புரவு ஆய்வாளர் பட்டயப் படிப்பில் சேர பிஎஸ்சி வேதியியல் மற்றும் பிளஸ் 2-வில் உயிரியியல்/ தாவரவியல்/ விலங்கியல் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனச் சேர்க்கை குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பிஎஸ்சி வேதியியல் மட்டும் படித்தவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்பட்டனர். இந்த விதியால் பிஎஸ்சி வேதியியல் படித்தவர்களால் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிஎஸ்சி வேதியியல் படித்த என்னைத் துப்புரவு ஆய்வாளர் பட்டயப் படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
''பல்கலைக்கழகப் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் உள்ளது. தற்போது தொழில்நுட்ப உலகில் இருக்கிறோம், இதனால் இப்போதும் முந்தைய கல்வித் தகுதியே தொடர வேண்டும் என நினைக்கக் கூடாது. கல்வித் தகுதியை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.
பழங்காலத்தில் மாட்டு வண்டியிலும், குதிரை வண்டியிலும் போனோம். இப்போது விதவிதமான கார்களிலும், விமானங்களிலும் பயணம் செய்கிறோம். தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்போது அதற்கு ஏற்ப தகுதியான நபர்களை உருவாக்க வேண்டும். கரோனா காலத்தில் நீதிமன்றங்கள் மூடியபோதும் தொழில்நுட்ப வசதியால் காணொலி வழியாக விசாரணை நடைபெறுகிறது.
எல்லாக் காலத்திலும் பழைய கல்வித் தகுதியைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல முடியாது. கல்வித் தரத்தை மேம்படுத்தவே உயர் கல்வித் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக முடிவில் தவறு இல்லை. பல்கலைக்கழகக் குறிப்பேட்டில் தலையிட வேண்டியதில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது''.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.