Published : 03 Jan 2021 04:54 PM
Last Updated : 03 Jan 2021 04:54 PM

விவசாயிகளை ரௌடிகளுடன் ஸ்டாலின் ஒப்பிடுவதா? -முதல்வர் பழனிசாமி கேள்வி

மண்வெட்டி பிடித்து, ஏர் பிடித்து உழுதுபாருங்கள் அப்போது கஷ்டம் தெரியும், வயலில் வேலை செய்திருந்தால் அந்த கஷ்டம் தெரியும், கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவருக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும் என முதல்வர் பழனிசாமி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில், நானும் ரௌடி தான், நானும் ரௌடி தான் என்பது போல, எடப்பாடி பழனிசாமி எப்பொழுதும் தான் ஒரு விவசாயி, விவசாயி என்று தன்னையே பெருமைப்படுத்தி சொல்லி கொள்கிறார் என்று பேசி வருகிறார்.

விவசாயியை ரௌடியோடு ஒப்பிட்டு பேசுகிறார். ரொம்ப வேதனையாக இருக்கிறது. எண்ணிப் பாருங்கள். எவ்வளவு கடுமையான சொல். ரௌடியும் விவசாயியும் ஒன்றா. எவ்வளவு ஒரு கீழ்த்தரமான பேச்சு.

இரவு, பகல் என்று பாராமல் உழைக்கின்றவர் விவசாயி. விவசாயிகளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். ஒரு நாள் வெயிலில் வந்து வேலை செய்து பாருங்கள் அப்போது கஷ்டம் தெரியும். மண்வெட்டி பிடித்து, ஏர் பிடித்து உழுதுபாருங்கள் அப்போது கஷ்டம் தெரியும். வயலில் வேலை செய்திருந்தால் அந்த கஷ்டம் தெரியும். கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவருக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும்.

அதனால் தான் ரௌடியோடு ஒப்பிட்டு பேசுகிறார். நீங்கள் நாட்டை மக்களுக்காகவா ஆண்டீர்கள், குடும்பத்திற்காக ஆண்டீர்கள். ரௌடித்தனம் செய்வதில் முதன்மையானவர் அவர் தான். மனதிற்குள் என்ன இருக்கிறதோ அது தானே வெளியில் வரும். நான் விவசாயி அதனால் விவசாயி என்று வெளிப்படுத்துகிறேன். அவர் ரௌடி என்பதால் ரௌடியை வெளிப்படுத்துகிறார்.

எதை பேசினாலும் சிந்தித்து பேச வேண்டும். விவசாயிகளின் மனம் புண்படும்படி இனியாவது திமுக தலைவர் பேச வேண்டாம் என்று விவசாயிகளின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் என்ற முறையில் அல்ல, விவசாயி என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஆட்சி பொறுப்பு ஏற்றபின் பல்வேறு சவால்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன். ஒரு பக்கம் கட்சி, ஒரு பக்கம் ஆட்சி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். தினந்தோறும் ஸ்டாலின் பிரச்சனைகளை உருவாக்கி, கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை முறியடித்து, சாதனை படைத்த அரசு தமிழக அரசு, கட்சி அண்ணா திமுக. மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்றவாறு திட்டங்களை செயல்படுத்தி, அவர்கள் வாழ்வது சிறக்க இந்த அரசு பாடுபடும்.

தை திருநாள், தமிழரின் திருநாள். தைப் பொங்கலை வேளாண் பெருமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் ஸ்டாலினால் ஏழை மக்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அதனை எல்லாம் தமிழக அரசு முறியடித்துவிட்டது”.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x