Published : 03 Jan 2021 03:24 PM
Last Updated : 03 Jan 2021 03:24 PM

கல்பாக்கத்தில் வேலை மும்பையில் தேர்வு மையமா?- சென்னையிலும் தேர்வு மையம்: பிரதமருக்கு சு.வெங்கடேசன் கடிதம்.

சென்னை

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால் சென்னையில் இன்னொரு மையத்தை அறிவிக்குமாறு மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திக்குறிப்பு வருமாறு:

“கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால் சென்னையில் இன்னொரு மையத்தை அறிவிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமருக்கும், அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங்கிற்கும் கடிதங்களை எழுதியுள்ளார்.

அவர் கடிதத்தின் விவரம் வருமாறு:

"பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு சுழற்சி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கை எண் 1/2020 ல் Stipendiary Trainees Categories I, II & Category II (C) ஆகிய பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப் பணியிடங்கள் தாராப்பூர், கல்பாக்கத்தில் உள்ள அணு மறுசுழற்சி கழகங்களில் இருப்பவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கல்பாக்கத்தில் உள்ள காலியிடங்களுக்கான பணி நியமன எழுத்துத் தேர்வுகள் மும்பையில் மட்டுமே நடைபெறுமென்று குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பை அளிக்கிறது. இது தேர்வர்களை கோவிட் சூழலில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்குவதாகும். மேலும் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சார்ந்த தேர்வர்கள் கூடுதலான நிதிச் சுமைக்கும் ஆளாக வேண்டியிருக்கும்.

இந்த பணி நியமன அறிவிக்கையில் செய்யப்பட்டுள்ள பிரகடனம் மகிழ்ச்சி அளிப்பதாகும். "பாலின நிகர் நிலையைப் பிரதிபலிக்கிற ஊழியர் உள்ளடக்கத்தை உருவாக்க அரசு முனைப்போடு இருக்கிறது; பெண் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்" என அது கூறுகிறது.

மேலும் வயது வரம்பில் சலுகைகள் "கைம்பெண்கள், மண முறிவு பெற்ற பெண்கள், சட்டரீதியாக கணவர்களைப் பிரிந்து மறு மணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கு அரசின் ஆணைகளின்படி பிரிவு 2 பதவிகள் (வரிசை எண் 2.1 முதல் 2.12 வரை குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு" விண்ணப்பித்தால் தரப்படும் என்று உள்ளது.

எனினும் ஒரே தேர்வு மையம், அதுவும் நெடுந்தொலைவில் எனும் போது அது பாலின நிகர் நிலை எண்ணமற்றதாக்வே இருக்கிறது. ஆகவே, எழுத்துத் தேர்வுகளுக்கான இன்னொரு மையத்தை சென்னையில் அமைக்குமாறு வேண்டுகிறேன். எனது நியாயமான கவலைகளை ஏற்று உடனடியாக நல்ல முடிவை எடுக்குமாறு வேண்டுகிறேன்."

தொடர் பாரபட்சம்

ஏற்கனவே சி.ஆர்.பி.எப் நடத்துகிற துணை மருத்துவப் பதவிகளுக்கான தேர்வு மையங்கள் 9-ல் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை என்று அரசுக்கு கடிதம் எழுதினேன். விண்ணப்பங்களைப் பொருத்து பரிசீலிப்பதாகப் பதில் சொன்ன அரசாங்கம் இப்போது தமிழகத்தில் மையம் அமைக்க வாய்ப்பில்லை என்று பதில் அளித்துள்ளது.

மையங்களை அறிவிக்கும் போதே கவனம் எடுக்காவிட்டால் எப்படி விண்ணப்பங்கள் உரிய எண்ணிக்கையில் வரும்? இப்படி தமிழகத்திற்கு தொடர்கிற பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும், என்று கூறியுள்ளார்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x