Published : 03 Jan 2021 01:52 PM
Last Updated : 03 Jan 2021 01:52 PM

தடுப்பூசி இந்த மாதத்திற்குள் வந்துவிடும்: மத்திய அரசு ஓரிரு நாளில் முழுப்பட்டியல் அறிவிக்க வாய்ப்பு: சுகாதாரத்துறைச் செயலர் அறிவிப்பு

கரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு வழங்கப்படும் அளவு குறித்த பட்டியல் ஓரிரு நாளில் மத்திய அரசு அளிக்கும், வந்தவுடன் உடனடியாக தகவல் தெரிவிப்போம், தற்போது சுகாதாரப்பணியாளர்கள், முன் களப்பணியாளர், பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறைச் செயலர் கூறியதாவது:

“மாநிலங்களுக்கு தடுப்பூசி எப்படி சப்ளை ஆகும் என்பதை வரும் வாரங்களில் அறிவிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாம் அது வருவதற்கு முன் நாம் எப்படி தயாராக இருப்பது என்பதற்கு தயாராகிவிட வேண்டும். மருந்து வந்தவுடன் அதை சேமித்து வைக்கும் 2800 குளிரூட்டப்பட்ட மையங்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள், அது மட்டுமல்லாமல் முன் 6 லட்சம் சுகாதாரப்பணியாளர்களுக்கு முன்னுரிமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப்பட்டியல் தயார் செய்துக்கொள்ளுங்கள், தடுப்பூசி போடும் மையங்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள், கோவிட் தடுப்பூசி போடும் பட்டியலை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்கள். அது கிடைத்தவுடன் இரண்டு மூன்று நாட்களுக்குள் அதற்கான பட்டியலை உங்களுக்கு அனுப்பிவிடுவோம்.

எங்களுக்கு கிடைத்தவுடன் உடனுக்குடன் அதுகுறித்து தெரிவித்துவிடுவோம். சுகாதாரப்பணியாளர்கள் என 6 லட்சம் பேர் பட்டியலை அளித்துள்ளோம். இது தவிர முன்களப்பணியாளர்கள் பட்டியல் தயார் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவித்துள்ளோம்.

கிடைக்கும் தகவல்களை மத்திய அரசிடம் அளித்து மத்திய அரசு சில வழிகாட்டுதலை வைத்துள்ளார்கள். 50 வயதுக்கு மேற்பட்டோர். கூட்டு நோய் உள்ளோர் என வகைப்படுத்தி வைத்துள்ளனர். அந்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு விரைவில் அளிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். ஒரு காலக்கட்டத்தில் சப்ளை அதிகம் கிடைக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் அதற்கு ஏற்றாற்போல் நடைமுறை இருக்கும்.

தமிழ்நாட்டில் முதியோர்கள் அதிகம் என்பது மத்திய அரசுக்கே தெரியும், அதேப்போன்று 50 வயதுக்கு மேற்பட்டோர் 78% பேருக்கு கூட்டு நோய் அதிகம் இருக்கும் என்பதும் இந்திய அளவில் கணக்கீடு. இது தேசிய அளவில் உள்ள கணக்கீடு. மஹாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்தது தெரியும். நாம் கட்டுப்படுத்திவிட்டாலும் தடுப்பூசி மிக முக்கியமான ஒன்று.

முதலில் தடுப்பூசி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அங்கிகரிக்க வேண்டும். நமக்கும் விஞ்ஞான ரீதியான மனப்பான்மை வேண்டும். தடுப்பூசி முகக்கவசத்தை தாண்டி நோய் வராமல் தடுக்கும் ஒன்று. அதனால் தான் முதல்வர் ஜூன் மாதத்திலிருந்தே ஆயத்தப்பணிகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து நாம் அனைத்து நிலைகளுக்கும் தயாராக உள்ளோம்.

தற்போது 51 வாக்சின் கூலர்கள் தயார் நிலையில் உள்ளது. 2.5 கோடி தடுப்பூசிகள் சேகரித்து வைக்கும் 8500 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயாராக உள்ளது. குளிருட்டப்படும் நிலையில் உள்ள பெட்டகங்கள் உள்ளன. நம்ம மாநிலத்துக்கு எவ்வளவு தடுப்பூசிகள், சிரிஞ்சுகள் குறித்து பட்டியல் வந்தவுடன் உடனே தகவல் சொல்வோம்.

தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயமாக போட மாட்டோம். அதே நேரத்தில் இது தொற்று நோய் காலம் என்பதால் அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதனால் வரும் அளவைப்பொறுத்து பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முதலில் போட உள்ளோம்”.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x