Published : 03 Jan 2021 12:12 PM
Last Updated : 03 Jan 2021 12:12 PM

குரூப்-1 தேர்வு தொடங்கியது: 66 இடங்களுக்கு 2.57 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் அரசுத்துறைத் தேர்வில் முக்கியத்தேர்வான குரூப்.1 தேர்வு இன்று நடைபெறுகிறது.. 66 பணியிடங்களுக்காக தமிழகம் முழுவது 2.57 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

கரோனா ஊரடங்கினால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வும் ஒன்று. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பதை அடுத்து ஜன.3 அன்று தேர்வு நடக்கும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் தேர்வுகளுக்கு அடுத்து முக்கியத்துவம் மிக்க தேர்வு குரூப் 1 தேர்வு ஆகும்.

தமிழக அரசுப்பணியில் முக்கிய பொறுப்புகளுக்கான பணி என்பதாலும், இத்தேர்வுகளில் வெல்வோர் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக நிலை உயர்வு பெற வாய்ப்புள்ளதால் இப்பதவிக்கான தேர்வும் மத்திய தேர்வாணைய தேர்வுபோன்றே அதே முறையில் நடத்தப்படுகிறது.

முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என அதே பாணியில் தேர்வுகள் உண்டு என்பதால் தேர்வர்கள் கடுமையான பயிற்சி எடுத்தே தேர்வில் கலந்துக்கொள்கின்றனர். முதல் நிலைத்தேர்வு இன்று நடக்கிறது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் 2.57 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.

துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 856 இடங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வர்களைக் கண்காணிக்கும் பணியில், தலைமைக் கண்காணிப்பாளர்கள் 856 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் 150 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 46,965 பேர் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் முதல்நிலைத் தேர்வுக்கு 1,28,401 மாணவர்கள், 1,288,25 மாணவிகள் மற்றும் 11 மாற்றுப் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொது அறிவுத் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ‘ஒரு காலியிடத்துக்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத் தேர்வில் இருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு 2 மாதம் கழித்து நடக்கும்.

தேர்வில் முறைகேடு நடக்காவண்ணம் கைவிரல் ரேகை சேகரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் எவ்விதத்தில் எல்லாம் முறைகேடுகள் நடந்ததோ அதை தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x