Published : 03 Jan 2021 09:33 am

Updated : 03 Jan 2021 09:33 am

 

Published : 03 Jan 2021 09:33 AM
Last Updated : 03 Jan 2021 09:33 AM

100 கிலோ மீன்களுக்கு 60 கிலோ கருவாடு- கிராம மக்களின் விருப்பமான உணவு

dry-fish

ராமேசுவரம்

அசைவ பிரியர்கள் மீன்களுக்கு மாற்றாக விரும்பி உண்ணும் உணவுப் பொருள் கருவாடு. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுணக்கம் கண்டிருந்த கருவாட்டு வியாபாரம் ஜிஎஸ்டி தளர்வுக்கு பிறகு ராமேசுவரத்தில் சூடு பிடித் துள்ளது.

நகர்வாசிகள் கருவாட்டை அவ்வளவாக விரும்புவதில்லை என்றாலும், கிராமத்து மக் கள் கருவாட்டை விரும்பிச் சாப்பிடுவர். கிராமப்புறங்களில் சுண்டக் கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள கருவாடுதான் சுவையான கறி. எரிகிற நெருப்பில் அப்படியே சுட்டுத் தருவர். அதிலிருக்கும் சுவை வேறு எதிலும் இருக்காது. விவசாயிகள், சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் அனைவரின் விருப்பமான தொடுகறி கருவாடுதான்.


கருவாடு வியாபாரிகள் சிலர் கூறியதாவது: கருவாட்டுல நிறைய கால்சியம் சத்து இருக்கு. மருத்துவக் குணமும் கருவாட்டுல இருக்கு.! பறவைக் காய்ச்சல், சிக்குன் குன்யா வந்தப்போ, கச்ச கருவாட்ட ரசம் வச்சி குடிக்கச் சொன்னாங்க. அதுல கசப்பு அதிகம். அந்த கசப்பு நோயைக் குணப்படுத்தும்.

திருக்கை கருவாடு இடுப்பு வலிக்கு மரு ந்து. பால்சுறா குழந்தை பெற்ற தாய்மார் களுக்கு நல்லது. மாசி கருவாடு வளர் இளம் பருவத்தினருக்கு நல்லது. வலிமையைத் தரும். இந்த மாசிக் கருவாடு மாலத்தீவுல இருந்து வருது. சூரை மீன் கறியை அறுத்து காய வைத்து பாடம் போட்டு கொடுப்பாங்க. அது தான் அந்த கருவாட்டோட சிறப்பு. மழைக் காலத்தில் கருவாடு சாப்பிடுறது நல்லது. குளிர்ந்த உடம்பைச் சூடாக்கும் தன்மை கருவாட்டுக்கு இருக்கு. கிராமத்து மக்கள் குழம்பு கருவாடு விரும்பி வாங்குவர் என்றனர்.
பொதுவாக மாசி கருவாட்டை ராமநாதபுரம் மக்கள் விரும்பிச் சாப்பிடுவர். ராமேசுவரம் சீலாக் கருவாடு ஆறு மாசத்துக்குக்கூட கெடா மல் இருக்கும். அந்த அளவுக்கு தரமாகப் பாடம் செய்வர்.

கருவாட்டில் வாலை, கெளிச்சக் கருவாடு, காரப்பொடி, நெத்திலி, காஞ்ச எறா, சுறா, பால் சுறா, சென்னாகொன்னி, வஞ்சிரம், பாம்பே டெக், கோலா எனப் பல வகைகள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் கருவாடு விற்பனை செய்யும் தொழிலில் 200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாம்பன் பன்னா கருவாடு

பல்வேறு கருவாடுகளுக்கு மத்தியில் தனித் துவமாக விளங்குவது கொழுப்பு இல்லாத பாம்பன் ‘பன்னா கருவாடு’. மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இருந்து மீனவர்களால் பிடிக்கப்பட்டுவரும் பன்னா மீன்களின் செதில்களைச் சுத்தம் செய்துவிட்டு, வயிற்றின் மேல் பகுதியையும் கிழித்து சுத்தம் செய்து உள்ளே கல் உப்பைத் திணித்து நாள் முழுவதும் ஊற வைக்கிறார்கள். மறுநாள் பன்னா மீனின் வயிற்றில் வைக்கப்பட்ட கல் உப்பை அகற்றிவிட்டு, கடல்நீரில் நன்றாக அலசியெடுத்து, பின்னர் வெயிலில் நன்கு உலர வைத்து எடுக்கப்படுகிறது.

மீன்களைக் கருவாடாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறார், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆலின். அதிகாலையில் பாம்பன் கடற்கரைக்கு வந்துவிடும் இவர், அங்கு மீனவர்களால் பிடித்து வரப்படும் நகரை, பண்ணா, காரா, நெத்திலி, சீலா, விலை மீன் ஆகியவற்றை மொத்தமாக வாங்கி வந்து, கருவாடாக மாற்றத் தொடங்கிவிடுகிறார். 100 கிலோ மீன் வாங்கி காயப்போட்டா 60 கிலோ கருவாடுதான் கிடைக்கும்.

இதனால்தான் மீனைவிட கருவாடு விலை அதிகம். நெய்மீன்னு சொல்ற சீலா மீன் கரு வாடுதான் ரொம்ப ருசி. இந்த கருவாடை வாங்கு றதுக்குன்னே பாம்பனுக்கு வருவார்கள். இங்கு வாங்கிட்டுப் போய் ராமநாதபுரம், பரமக்குடி சந்தைல விற்பாங்க. ராமேசுவரத்துக்கு சுற்றுலா வரும் பொதுமக்களும் மறக்காம கருவாடு வாங்கிட்டுப் போவாங்க என்றார்.

உலரவைக்கப்பட்ட கருவாட்டின்மீது மஞ்சள் தடவி காற்றோட்டமான இடத்தில் உலர விட்டால் ஒரு மாதம்வரை பயன்படுத்தலாம். கருவாட்டில் மஞ்சள்பொடி தூவி டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். ருசி மிகுந்த பாம்பன் பன்னா கருவாடு கிலோ ரூ.300 முதல் ரூ. 350 வரை விற்பனையாகிறது.

ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனை செய்துவரும் சபீக் என்பவர் கூறியதாவது: கருவாடு வகைகளான சீலா கிலோ ரூ.800-க்கும், நெத்திலி ரூ.300-க்கும், நகரை மற்றும் பன்னா கருவாடுகள் ரூ.200-க்கும், காரல் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. மீன்களின் விலை உயர்வால் அசைவ பிரியர்கள் தற்போது கருவாடு வாங்கிச் செல்கின்றனர்.


Dry fish100 கிலோ மீன்60 கிலோ கருவாடுகிராம மக்களின் விருப்பமான உணவுஅசைவ பிரியர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x