Published : 03 Jan 2021 09:30 AM
Last Updated : 03 Jan 2021 09:30 AM

இரைக்காக இடம்பெயர்ந்துள்ள வவ்வால்கள்; மாங்காய்களை சேதப்படுத்துவதால் மகசூல் பாதிப்பு: போடி, பெரியகுளம் விவசாயிகள் பரிதவிப்பு

கொய்யா சீசன் முடிந்ததால் வெளிமாவட்டத்தில் இருந்து இரைதேடி வந்த ஆயிரக்கணக்கான வெளவால்கள் போடி, பெரியகுளம் மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ளன. இவை ஆஃப் சீசன் மாங்காய்களை கடித்து குதறுவதால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சோலையூர், வலசைதுறை சிறைகாடு, முந்தல், பெரியகுளம் அருகே கோயில்காடு, சோத்துப்பாறை, உப்புக்காடு, சித்தாறு, மணக்காடு, சுக்காம்பாறை, தொண்டைகத்தி, கும்பக்கரை, பாலாட்டி, முருகமலை, செழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மா விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் இந்த விவசாயத்தில் 65 சதவீதம் காசாரக மா பயிரிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளாமை, செந்தூரம், காளபாடி, காதர் உள்ளிட்ட ரக மாம்பழங்களும் விளைகின்றன. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து ஏற்ற பருவநிலை நிலவுவதால் போடி, பெரியகுளத்தில் மா விளைச்சல் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளது. தற்போது ஆஃப் சீசனுக்கான காய்கள் விளைந்துள்ளன. இவற்றை குறிவைத்து தினமும் ஆயிரக்கணக்கணக்கான வெளவால்கள் மாந்தோப்புகளில் முகாமிட்டு வருகின்றன.

இரவு முழுவதும் இங்குள்ள மாங்காய்களை கடித்து உண்டு சேதப்படுத்துகின்றன. காலையில் ஒவ்வொரு மரத்தடியிலும் ஏராளமான மாங்காய்கள் கடித்துக் குதறிய நிலையில் விழுந்து கிடக்கின்றன. இதனால் மகசூல் வெகுவாக பாதிக்கும் நிலை உள்ளது. கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட சீசன் முடிந்துள்ளதால் வவ்வால்கள் இரைக்காக பல கி.மீ. கடந்து இப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
இதுகுறித்து விவசாயி வெற்றி வேல் கூறுகையில், வீரப்ப அய்ய னார்கோயில், போடி பங்காருசாமி குளம், கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலமரம், அரசமரம், மருதம் போன்ற பிரமாண்டமான மரங்களின் உச்சியில் இவை தங்கி உள்ளன. இதற்கு மோப்ப சக்தி அதிகம். இரவானதும் மாந்தோப்புகளில் புகுந்து சேதப்படுகிறது. ஆயிரக் கணக்கில் வரும் வவ்வால்களை கட்டுப்படுத்த முடியாமல் பரிதவித்து வருகிறோம். குதறிய மாங்காய்களை விற்க முடியாது. 30 சதவீதத்திற்கும் மேல் இவ்வாறு வீணாகி வருகிறது என்றார்.

கடந்த ஆண்டு கரோனாவினால் போக்குவரத்து முடக்கப்பட்டு கடைகளும் வெகுவாய் அடைக்கப்பட்டன. இதனால் விளைந்த மாங்காய்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கோடை பருவ மாங்காய் விளைச்சலை எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு வவ்வால் பிரச்னை தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இவற்றை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x