Published : 03 Jan 2021 09:28 AM
Last Updated : 03 Jan 2021 09:28 AM

பொங்கலிடும் மண்பாண்டங்கள் விற்பனைக்கு தயார்: வாங்குவதற்கு ஆளில்லாததால் வருத்தத்தில் தொழிலாளர்கள்

திண்டுக்கல் 

தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கலிட மண்பாண்டங்களை தயாரித்து விற் பனைக்கு தயாராக வைத்துள்ள நிலை யில், அவற்றை வாங்கிச் செல்லும் வியா பாரிகள் வருகை குறைவாக உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்கள் வருத்த மடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகேயுள்ள தி.பாறைப்பட்டி கிராமத்தில் மண்பாண்ட தொழில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது. திருவிழாக் காலங்களில் விற்பனையாகும் அக்கினிச் சட்டிகள், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு விளக்கு சுட்டிகள், சமையலுக்கு பயன்படும் மண்பாண்டங்கள் என பல்வேறு அளவிலான மண்பாண்டங்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது. இதில் பிரசித்தி பெற்றது பொங்கல் பானை தயாரிப்பு. நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைத்தாலும், கிராமப்புறங்களில் இன்னமும் மண்பாண்டங்களில்தான் பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தைப் பொங்கலுக்கு மண்பானைகள் அதிகம் விற்பனையாகும். மாடுகள் வைத்திருப்பவர்கள், புதுப்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதால் வீட்டில் பொங்கல் வைக்க ஒரு மண் பானை, தோட்டத்தில் மாடுகளுக்கு பொங்கல் வைக்க ஒரு புதிய மண்பானை, என ஒருவர் குறைந்தது 2 பானைகளை வாங்கிச் செல்வர். இதனால் விற்பனை அதிகளவில் இருக்கும்.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பொங்கல் பானைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுவர். தி.பாறைப்பட்டியில் தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளை வாங்கிச்செல்ல திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகள், மதுரை, திருச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து விற்பனைக்கு வாங்கிச் செல்வர். பிற மாதங்களை விட தை மாதம் மண்பாண்டங்கள் அதிகம் விற்பனையாகும். இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் கணிச மான வருவாய் ஈட்டி வந்தனர்.

தி.பாறைப்பட்டி கிராமத்தில் மண் பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. வழக்கமான வியாபாரத்துடன் விசேஷ காலங்களான பங்குனி, ஆடி மாதங் களில் கிராமங்களில் அதிகளவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் தடைபட்டதால் அக்கினிசட்டி விற்பனை முற்றிலும் இல்லை. கரோனா கட்டுப்பாட்டுக்கு முன்னதாக தயாரிக் கப்பட்ட மண்பாண்டங்கள் இன்னும் விற்பனையாகாமல் அப்படியே உள்ளது. தற்போது கட்டுப்பாடு தளர்வுகள், விழாக்களுக்கு அனுமதி போன்ற அறிவிப்புகளால், பொங்கல் பானை விற்பனை கடந்த ஆண்டுகளைப்போல அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். மார்கழி தொடக்கம் முதலே விற்பனை களைகட்டும். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் விற்னையாகும். பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மொத்த மாக வியாபாரிகள் வாங்கிச் சென்று கிராமங்களில் விற்பனை செய்வர். ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை பொங்கல் பானைகளை விற் பனைக்கு வாங்கிச்செல்ல ஒரு சில வியாபாரிகளே வந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு விற்பனை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர்.

மண்பாண்டங்களுக்கு விலையும் இல்லை, வியாபாரமும் இல்லை

அரை நூற்றாண்டாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் சுப்பையா கூறுகையில், மண்பாண்டங்கள் செய்வதற்கும் விற்பனையாவதற்கும் விலை கட்டுப்படியாகவில்லை. ரூ.50 வரை பொங்கல் பானைகள் விற்பனை செய்கிறோம். இதை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் லாபம் வைத்து சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். பானைகள் தயாரிக்கவே விலை கட்டுபடியாகாத நிலையில் தற்போது வியாபாரமும் இல்லை.

வியாபாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், மண்பாண்டங்கள் தயாரிப்புக்கு மூலப்பொருளான களிமண் கொண்டுவர சிரமப்பட வேண்டியதுள்ளது. தொழிலுக்கு தேவையான மண்ணை குளம், கண்மாய்களில் எடுப்பதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை. தொழில் செய்யவே மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் பலரும் இந்த தொழிலை விட்டுவிட்டு மாற்றுத் தொழிலை தேடிச் செல்கின்றனர்.

கரோனா காலத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் விற்பனையாகமல் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொங்கலை எதிர்பார்த்து தயாரித்த பொங்கல் பானை விற்னையும் மந்தமாக உள்ளதால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x