கடலூர் மாவட்ட டெல்டாவை வளமாக்கிய சர் ஆர்தர் காட்டன்

கடலூர் மாவட்ட டெல்டாவை வளமாக்கிய சர் ஆர்தர் காட்டன்
Updated on
2 min read

டெல்டா மாவட்டங்களின் கடை மடை மாவட்டம் நம் கடலூர் மாவட்டம். இப்பகுதிக்கு மட்டுமின்றி மொத்த டெல்டா பகுதிக்கும் நீர் மேலாண்மையை உருவாக்கி, பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்.

‘இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் இவர் 15.5.1803ல் இங்கிலாந்தில் பிறந்தார். இவர், 1829-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசால் தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கரிகாலச் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து போன அவர், அங்கு தண்ணீரைப் பிரித்து வழங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அணையைப் பலப்படுத்தினார். மணல் மேடுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார்.

கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டு, அதை தடுக்கும் வகையில் கடந்த1835-36-ம் ஆண்டுகளில் கொள்ளிடத்தின் குறுக்கே கல்லணைக்கு கீழே 67 வது மைல் தொலைவில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய அணைக்கரையில் கீழணையை கட்டினார்.

இதனால் தண்ணீர் வீணாகி கடலில் சென்று கலப்பதைத் தடுத்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதன் நீர் வழி பரப்பளவு 29 ஆயிரத்து 613 சதுர மைலாகும். இந்த கீழணையின் மூலம் வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், கஞ்சங்கொல்லை வாய்க்கால், விநாயகன் தெரு வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கி மண்ணியர், மேலராமன் வாய்க்கால் ஆகியவை பிரிந்து செல்கிறது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடலூர் மாட்ட டெல்டா பகுதிகளுக்கு வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கும், வடக்கு ராஜன் வாய்க்கால், கஞ்சஞ்கொல்லை வாய்க்கால் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமண்ணியர், மேலராமன் வாய்க்கால், விநாயகன் தெரு வாய்க்கால் ஆகிவற்றின் மூலம் தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

கீழணையில் இருந்து அதிக அளவு பாசனம் பெறும் பகுதி நமது கடலூர் மாவட்ட டெல்டா பகுதியே ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி வளமிகு பகுதியாக மாறியிருக்கிறது. அதற்கு பொறியாளர் சர் ஆர்தர் காட்டனுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இதே சர் ஆர்தர் காட்டன் ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளிலும் அணைகளைக் கட்டியிருக்கிறார். “இந்திய தேசத்தின் வறுமையைப் போக்குவதில் முக்கிய தீர்வு, நீர் வளத்தை சிறப்பாக பயன்படுத்துவது தான்" என்று கூறி அதனை செயல்படுத்தி காட்டியவர் சர் ஆர்தர் காட்டன்.

“தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்ப் பாசன திட்டங்களை செய்தவர் சர் ஆர்தர் காட்டன். காடாக கிடந்த கடலூர் மாவட்ட டெல்டா பகுதியை வளமாக்கிய அவருக்கு கீழணையில் சிலை வைக்க வேண்டும்.

இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்கள் அறிந்த கொள்ளும் வகையில் பாடபுத்தகத்தில் அவரது வரலாற்றைச் சேர்க்க வேண்டும்” என்கிறார் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகன் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in