

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருக்கும் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுமக்களின் வசதிக்காக வேளச்சேரி - பரங்கிமலையை இணைக்கும், பறக்கும் ரயில் திட்டப்பணியை ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. அதிமுக அரசு மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனத்தாலும், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக சார்பில் ஆலந்தூர் - வேளச்சேரி பறக்கும்ரயில் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள தெற்கு ரயில்வே மற்றும்அதிமுக அரசைக் கண்டித்து ஆதம்பாக்கத்தில், மழையையும் பொருட்படுத்தாது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி,அமைப்புச் செயலர் ஆஸ்.எஸ்.பாரதி எம்.பி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச் செயலர் தாமோ.அன்பரசன், எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், எம்.எல்.ஏக்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, திருப்போரூர் இதயவர்மன், செங்கல்பட்டு வரலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்று அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.