Published : 03 Jan 2021 03:22 AM
Last Updated : 03 Jan 2021 03:22 AM

செங்கை மாவட்டத்தில் முத்திரைத் தாள் விற்பனையில் முறைகேடு: கள ஆய்வு மூலம் கண்டறிய நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் முத்திரைத் தாள் விற்பனையில் நடக்கும் முறைகேடுகள், கள ஆய்வு மூலம் கண்டறியப்பட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில், சொத்து விற்பனை, வாடகை ஒப்பந்தம், கடன் பத்திரம் என பல்வேறு நிலைகளில் முத்திரைத் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, அரசு கரூவூலங்கள் வாயிலாக வழங்கப்படும் முத்திரைத் தாள்களை, மக்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இத்தாள்களை விற்பனை செய்ய, உரிய நபர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இதில், முத்திரைத் தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புப்படியே, அவற்றை விற்பனை செய்ய வேண்டும். அத்தொகையில், குறிப்பிட்ட சதவீதம், விற்பனையாளர்களுக்கு கமிஷனாக வழங்கப்படுகிறது. ஆனால், பல இடங்களில், முத்திரைத் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பை விட, கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

இந்நிலையில் பதிவுத் துறை ஆன்லைன் மயமாக்கப்பட்டதால் பத்திரங்களின் தேவை குறைந்துவிட்டது. இதனால் கருவூலங்களுக்கு பத்திரங்களை அனுப்புவதை அரசு குறைத்துவிட்டது. இருந்தபோதிலும் வங்கிகளில் கடன் பெறுதல், பல்வேறு உறுதிமொழி பத்திரம், வீடு, கடை வாடகை ஒப்பந்தம், தனிநபர்கள் இடையே ஒப்பந்தம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.20 பத்திரங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. மேலும்விற்பனையாளர்கள் சிலர், போலியாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி,அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் என பத்திர எழுத்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நுகர்வோர் அமைப்பினர் கூறியதாவது: வங்கிகளில் வீட்டுக்கடன், தொழில்கடன், கல்விக்கடன் பெறுவதற்கு பத்திரங்கள் தேவைப்படுகின்றன. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கும் பத்திரம் அவசியம் தேவை. பிறப்பு, இறப்பு உறுதிமொழிக்கும், எல்ஐசி பாலிசி பாண்டுதொலைந்து போனாலும், மின் இணைப்பு பெயர் மாறுதல் செய்ய,லைசென்ஸ் காணாமல் போனாலும் திரும்பப் பெற, திருமணங்களை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முத்திரைத் தாள் அவசியம் தேவை.

செங்கல்பட்டு மாவட்டத்தில்முத்திரைத் தாள் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு அவற்றை விற்பனை செய்கின்றனர். இந்த முறைகேட்டைத் தவிர்க்க துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அரசு நிர்ணயித்த விலையில் முத்திரைத் தாள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் முத்திரைத் தாள்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அவற்றை கூடுதல் விலைக்கு விற்பதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் சட்ட விதிகளின்படி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x